[X] Close

ஜெட் ஏர்வேஸ் ஏலத்துக்கு 2 விண்ணப்பங்களே வந்துள்ளன: பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ்குமார் தகவல்


2

  • kamadenu
  • Posted: 11 May, 2019 07:57 am
  • அ+ அ-

ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனை ஏலத்துக்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இரண்டு விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடியால் திவாலாகும் நிலையில் உள்ள ஜெட் ஏர்வேஸை மீட்கும் நடவடிக்கையில் எஸ்பிஐ தலைமையிலான வங்கிக் குழு இறங்கியது. ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஏலத்தில் விற்பனை செய்ய முடிவெடுத்து அதற்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது.

முன்னதாக ஜெட் ஏர்வேஸ் பங்கு ஏலத்தில் ஈடுபட எதியாட் ஏர்வேஸ், டிபிஜி கேபிடல், இண்டிகோ பார்ட்னர்ஸ் மற்றும் தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியம் ஆகிய நான்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டின. இந்நிலையில் ஏல நடைமுறைக்கான கடைசி தேதி மே 10 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கெடு தேதி நேற்றுடன் முடிவடைந்தது.

ஆனால், இதுவரை இரண்டு விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. “ஜெட் ஏர்வேஸை தொடர்ந்து செயல்படுத்த எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துள்ளோம். மேலும் ஒரு விண்ணப்பம் வரும் என எதிர்பார்க்கிறோம்” என எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜ்னிஷ்குமார் தெரிவித்துள்ளார். ரூ.8,200 கோடி கடன், குத்தகை பாக்கி, சம்பள பாக்கி உள்ளிட்ட காரணங்களினால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியது ஜெட் ஏர்வேஸ். கடன் வழங்கிய வங்கிகள் எஸ்பிஐ தலைமையில் குழு அமைத்து, நரேஷ் கோயல் தலைமையிலிருந்து நிர்வாகத்தை கைப்பற்றின. ஆனால், நிறுவனத்தை தொடர்ந்து நடத்த தருவதாக சொன்ன நிதியை எஸ்பிஐ தரவில்லை. இதனால் விமான சேவைகளைத் தொடர்ந்து நடத்த முடியாமல் ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஜெட் ஏர்வேஸின் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

பங்கு விலை உயர்வு

ஏலத்துக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட செய்தி வெளிவந்ததால் நேற்றைய வர்த்தகத்தில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாயின. ஆனால், ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை பங்கு விலை 39.29 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close