[X] Close

ஜெட் ஏர்வேஸை மீட்க ரூ.250 கோடி நிதி: ஊழியர்களுக்கு நரேஷ் கோயல் நெகிழ்ச்சி கடிதம்


250

  • kamadenu
  • Posted: 09 May, 2019 07:49 am
  • அ+ அ-

ஜெட் ஏர்வேஸை மீட்க தனது சொந்த பணம் ரூ.250 கோடி கொடுத்ததாக அதன் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 5-ம் தேதி 26-ம் ஆண்டு நிறைவை மிகவும் சோகமான நிலையில் கொண்டாடி முடித்தது ஜெட் ஏர்வேஸ். இந்த தருணத்தில் ஜெட் ஏர்வேஸை நிறுவியவரும் அதன் முன்னாள் தலைவருமான நரேஷ் கோயல் அதன் ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் ஜெட் ஏர்வேஸ் மீட்பு நடவடிக்கையில் கடனுக்கு ஈடாக பங்குகளை அடமானம் வைத்ததோடு மட்டுமல்லாமல், தனது சொந்த பணத்திலிருந்து ரூ.250 கோடி கொடுத்துள்ளதாக நரேஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மே 5 நம் மனதில் நீங்காத மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நாள். ஆனால், கடந்த மே 5 நமக்கு சோகமான நாளாக அமைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

1993 ஏப்ரல் 18-ல் முதல் விமானத்தை இயக்கினோம். ஆனால், அதே ஏப்ரல் 18, 2019-ல் நம்முடைய கடைசி விமானத்தை இயக்கினோம் என்பது மேலும் வருத்தமளிக்கிறது. ஜெட் ஏர்வேஸை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக நானும் மனைவி நீதாவும் பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறோம். ஆனால், அதைவிட ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களாகிய நீங்கள் செய்த தியாகங்கள் மிகவும் பெரியது. இப்போது எல்லோருடைய விருப்பமுமே மீண்டும் ஜெட் ஏர்வேஸ் மீண்டு வர வேண்டும் என்பதுதான்.

வங்கிக் குழுவின் மீட்பு நடவடிக்கைக்கு மே 10 கெடு தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 10-ம் தேதி ஏல நடவடிக்கைகள் நிறைவு பெற்று ஒரு புதிய வழி பிறக்கும் என்று உங்களைப் போலவே நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

வங்கிக் குழு நிர்வாகத்தைக் கைப்பற்றி ஜெட் ஏர்வேஸை மீட்கும்நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருகிறது. தற்போது ஜெட் ஏர்வேஸ் முடங்கியுள்ள நிலையில் புதிதாக ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது. எதியாட் ஏர்லைன்ஸ் 2014-ல் ஜெட் பிரிவிலேஜ் நிறுவனத்தில் ரூ.900 கோடி முதலீடு செய்த விவகாரத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியிருப்பதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close