[X] Close

ஜூன் மாதத்தில் மீண்டும் வட்டி குறைக்க வாய்ப்பு: ஐஹெச்எஸ் மார்கிட் அறிக்கையில் தகவல்


  • kamadenu
  • Posted: 09 May, 2019 07:48 am
  • அ+ அ-

இந்திய ரிசர்வ் வங்கி வரும் ஜூன் மாதம் அடுத்த வட்டி விகிதக் குறைப்பை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை நீடிப்பதாலும், இந்தியாவில் பணவீக்கம் அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க இருப்பதாலும், வரும் ஜூன் மாதம் நடக்கவிருக்கும் நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதக் குறைப்பை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பணவீக்கம் உயரும்பட்சத்தில் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கைகளை எடுப்பது சவாலானதாக இருக்கும். எனவே பணவீக்க அழுத்தம் மற்றும் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்புக்கு முன்னால் எடுக்கப்படவிருக்கும் இந்த நடவடிக்கையானது இவ்வாண்டின் அடுத்த அரையாண்டை சமாளிக்க உதவும் என்று ஐஹெச்எஸ் மார்க்கிட் ரிசர்ச் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

சர்வதேச நிதிக்கொள்கை நடவடிக்கைகள் மற்றும் அதன் பொருளாதார தாக்கத்தின் மீதான கணிப்பின்படி, ரிசர்வ் வங்கி 2020 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான பொருளாதாரக் கொள்கையை இறுக்க வாய்ப்புள்ளது என லண்டனைச் சேர்ந்த ஐஹெச்எஸ் மார்க்கிட் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்படும் கடன் வழிமுறைகளின் மீதான தளர்வு மற்றும் தேர்தலின் பொருட்டு ஏற்பட்ட செலவீனங்கள், 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உணவு மற்றும் எரிபொருட்களின் விலை இந்த நிதி ஆண்டின் அடுத்த அரையாண்டில் அதிகரிக்கும். இதனால் பணவீக்கம் 5 சதவீதத்தை தாண்டும். 2019-ல் சராசரியாக 4.2 சதவீதமாகவும் 2020-ல் 5.3 சதவீதமாகவும் பணவீக்கம் இருக்குமென்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. எனவே ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை தளர்வு, பொருளாதார வளர்ச்சியை நிலையாக வைத்திருக்க உதவும். கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த நிதிக் கொள்கை கூட்டங்களில் தொடர்ந்து தலா 25 அடிப்படை புள்ளிகளை ரிசர்வ் வங்கி குறைத்தது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக உள்ளது. வரும் ஜூன் மாதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டால் 5.75 சதவீதமாகக் குறையும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close