[X] Close

ஹெச்1 பி விசா கட்டணத்தை உயர்த்த முடிவு: இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு


1

  • kamadenu
  • Posted: 08 May, 2019 08:04 am
  • அ+ அ-

ஹெச் 1 பி விசா விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை தொழிலாளர் துறை அமைச்சர் அலெக்சாண்டர் அகோஸ்டா தெரிவித்தார். இந்த நடவடிக்கை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்று தெரிகிறது.

அமெரிக்க பணியாளர்களின் நலனைக் காக்கவும் ஹெச் 1 பி விசா நடைமுறையில் மேலும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் இந்த நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் எத்தனை சதவீத அளவுக்குக் கட்டணம் உயர்த்தப்படும் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் ஹெச் 1 பி விசா விண்ணப்பங்களை பதிவு செய்கின்றன. இதனால் இந்திய நிறுவனங்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கு ஹெச் 1 பி விசா அவசியம். தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆண்டுதோறும் இந்த பிரிவில் பல்லாயிரக் கணக்கானவர்களை பணியில் அமர்த்துகிறது. குறிப்பாக இந்தியா, சீனாவிலிருந்து பெருமளவிலானோர் ஹெச் 1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணி புரிகின்றனர்.

அமெரிக்கர்களின் பணி வாய்ப்புகள் பறி போவதைத் தடுப்பதற்காக ட்ரம்ப் நிர்வாகம் ஹெச் 1 பி விசா நடைமுறைகளை கடுமையாக்கியுள்ளது.

அமெரிக்க இளைஞர்கள் தொழில்நுட்ப பிரிவில் நிபுணத்துவம் பெறுவதற்கு அப்ரென்டிஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அரசு 15 கோடி டாலரை முதலீடு செய்ய உள்ளது. இத்திட்டத்துக்கு உதவும் வகையில் விசா விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அகஸ்டா தெரிவித்தார். அப்ரென்டிஸ் திட்டத்தை தனியாருடன் இணைந்து அரசு செயல்படுத்த உள்ளது. இதில் தனியாரின் பங்களிப்பு 35 சதவீதமாகும். கடந்த ஆண்டு நான்கு பேரில் ஒரு வெளிநாட்டு பணியாளருக்கு விசா அனுமதியை வெளியுறவு அமைச்சகம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் 1 லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் ஹெச் 1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வருகின்றனர். தற்போது 6.5 லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் ஹெச் 1 பி விசாவில் பணி புரிகின்றனர். இந்த விசா 6 ஆண்டுகளுக்கானதாகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close