[X] Close

ஐஎல் அண்ட் எஃப்எஸ் விவகாரத்தில் ஆடிட்டர்கள்தான் முக்கிய சாட்சி: நிறுவனங்கள் விவகாரத் துறை செயலர் கருத்து


  • kamadenu
  • Posted: 06 May, 2019 08:12 am
  • அ+ அ-

ஐஎல் அண்ட் எஃப் எஸ் பிரச்சினையில் ஆடிட்டர்கள் பதில் வேண்டிய கேள்விகள் அதிகம் உள்ளதாக நிறுவனங்கள் விவகாரத் துறை செயலர் இஞ்சேதி சீனிவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐஎல் அண்ட் எஃப் எஸ் குழுமம் ரூ.94 ஆயிரம் கோடி அளவிலான கடன் நெருக்கடியில் உள்ளது. கிட்டதட்ட திவால் ஆகும் நிலைக்கு ஆளானது. இதனால் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறையே பணப்புழக்க நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் இந்த விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிட்டு தீர்வு காண முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக, கணக்குகளை நிர்வகித்து வந்த டிலாய்ட் ஆடிட்டிங் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஐஎல் அண்ட் எஃப் எஸ் கணக்குகளில் மோசடிகள் நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே ஐஎல் அண்ட் எஃப் எஸ் விவகாரத்தில் ஆடிட்டர்கள் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளதாக நிறுவனங்கள் விவகாரத் துறைச் செயலர் இஞ்சேதி சீனிவாஸ் கூறியுள்ளார்.

ஆடிட்டர்கள் வைக்கோல் போருக்குள் ஒளிந்திருக்கும் ஊசியைக் கண்டுபிடிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒருவேளை அதில் யானை ஒளிந்திருந்தால் அவர்கள் கண்டுபிடித்திருக்க வேண்டும் அல்லவா? என்று கேள்வி எழுப்பினார். ஐஎல் அண்ட் எஃப் எஸ் விவகாரத்தில் முக்கிய சாட்சிகளாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள்தான். அவர்கள்தான் நிறுவனத்தின் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை சரி செய்திருக்க வேண்டும். அவர்கள் பணியை சரியாகச் செய்திருந்தால் கணக்குகளில் முரண்பாடுகள் இருப்பது தெரிந்திருக்கும். எனவே இந்த விவகாரத்தில் ஆடிட்டர்கள்தான் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார். ஆடிட்டர்கள் மீது தவறுகள் இருந்தால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐஎல் அண்ட் எஃப் எஸ் விவகாரம் தற்போது பல்வேறு அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஐஎல் அண்ட் எஃப் எஸ் வழங்கிய கடன்களில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை அனுமதித்த ஆடிட்டிங் நிறுவனங்களான டிலாய்ட், பிஎஸ்ஆர் அண்ட் அசோசியேட்ஸ், கேபிஎம்ஜி ஆகியவை இந்த விவகாரத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close