[X] Close

ஜெட் ஏர்வேஸின் வெளிநாட்டு சேவை உரிமம்: பிற நிறுவனங்களுக்கு வழங்க முடிவு


  • kamadenu
  • Posted: 05 May, 2019 07:55 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் சிக்கி தரைஇறக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு சேவை உரிமங்களை பிற நிறுவனங்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

நிறுவனத்தை செயல்படுத்துவதற்கு உரிய புதிய நிறுவனம் கிடைக்காத நிலையில் அடுத்த வாரத்தில் இந்த உரிமங்களை பிற நிறுவனங்களுக்கு வழங்கப்போவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் இயக்கிய வழித் தடங்களில் சேவை அளிக்க எந்தெந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கின்றனவோ அவற்றுக்கு அந்த உரிமங்களை அளிக்கப் போவதாக அமைச்சகத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான சேவைக்கான உரிமத்தைப் பெற நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது.

மத்திய அரசின் இந்த முடிவு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏற்று நடத்த ஆர்வம் காட்டும் நிறுவனங்கள் மத்தியில் தேக்க நிலையை உருவாக்கும் என்றே தோன்றுகிறது.

நிறுவனம் மீண்டும் செயல்படத் தொடங்கும்போது இந்த உரிமங்கள் மீண்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. பின்வரும் வழித்தடங்களில் வாரத்துக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளின் எண்ணிக்கை விவரம்: துபாய் (13,006), சிங்கப்பூர் (11,032), அபுதாபி (10,584), தாய்லாந்து (10,016), கத்தார் (8,463) ஆக உள்ளது. இவற்றை பிற நிறுவனங்கள் பெற்று அந்தந்த வழித் தடங்களில் இயக்கும் என்றும், இது தற்காலிக ஏற்பாடு என்றும் அரசு தெரிவித்துள்ளது.

`ரோஜா’ திட்டம்

இதனிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களில் ஒரு பிரிவினர், இந்நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிறுவன நிர்வாகத்தை கையிலெடுத்து ரூ.3,000 கோடி தொகையை பிற முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட முடிவு செய்துள்ளனர். ரிவைவல் ஆஃப் ஜெட் ஏர்வேஸ் பிளான் அல்லது ரோஜா என இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கெனவே கடன் வழங்கிய எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றை அணுகி தங்கள் திட்டத்தை விளக்கியுள்ளனர். நிறுவனத்தை வாங்கி செயல்படுத்துவது (எல்பிஓ) என்ற அடிப்படையில் ஜெட் ஏர்வேஸை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் இவர்கள் இறங்கியுள்ளனர்.

நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான செயல்திட்ட அறிக்கையை சங்கரன் பி ரகுநாதன் தயாரித்து அதை கடன் வழங்கும் வங்கிகளிடம் அளித்துள்ளார். இந்த திட்ட நகல் பைலட்கள், பொறியாளர்கள், ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி அனைத்து ஊழியர்களின் 6 மாத சம்பளமாக ரூ. 1,500 கோடியை வங்கி அளிக்க வேண்டும். இந்த பணத்தின் மூலம் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை எஸ்பிஐ-யிடமிருந்தும், 12.5 சதவீதத்தை எதியாட் ஏர்லைன்ஸிடமிருந்தும் அவர்கள் வாங்குவர். எஞ்சியுள்ள ரூ. 200 கோடி மூலம் புதிதாக பங்குகள் அளிக்கப்படும். இதன் மூலம் நிறுவனம் முழுவதுமாக ஊழியர்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஜெட் ஏர்வேஸில் அடிக்கடி பயணம் மேற்கொண்ட பெரும் தொழிலதிபர்களிடமிருந்து நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல வங்கிகள் ஒவ்வொன்றும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள நான்கு டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். இந்த டிக்கெட்டுகள் 2 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இவ்விதம் முன் பதிவு டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 8 ஆயிரம் கோடி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஊழியர்களுக்கு ஒவ்வொன்றும் ரூ. 150 விலையில் 100 பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 12 ஆயிரம் கோடி திரட்ட முடியும்.

மொத்தம் திரட்டப்படும் ரூ. 20 ஆயிரம் கோடியை செயல்பாட்டு மூலதனமாக வைத்து நிறுவனத்தை இயக்குவதென திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close