[X] Close

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7%-ஆக குறையும்: நிதி அமைச்சக அறிக்கையில் தகவல்


7

  • kamadenu
  • Posted: 04 May, 2019 07:50 am
  • அ+ அ-

2018-19 நிதி ஆண்டில் தனிநபர் நுகர்வு, முதலீட்டு வளர்ச்சி, ஏற்றுமதி வளர்ச்சி என அனைத்தும் குறைந்துள்ளதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது என நிதி அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய புள்ளியியல் துறை 2018-19 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 2018-19 நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்துள்ளது. 7 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைவாகும். இந்நிலையில் நிதி அமைச்சம் மார்ச் மாத பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் 2018-19 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. தனிநபர் நுகர்வு குறைந்தது, முதலீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை, ஏற்றுமதியும் போதுமான வளர்ச்சியை எட்டவில்லை. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு நிதிக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கையை எடுத்தது. இதன்மூலம் சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்திருந்தாலும் வேகமாக வளரும் பொருளாதார நாடு என்பதிலிருந்து இந்தியா மாறவில்லை. எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்ட இந்தியா தயாராகிவருகிறது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

2013-14 நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 6.4 சதவீதம், 2014-15-ல் 7.4 சதவீதம், 2015-16 மற்றும் 2016-17 நிதி ஆண்டுகளில் 8.2 சதவீதம், 2017-18 நிதி ஆண்டுகளில் 7.2 சதவீதமாக இருந்துள்ளது. இது 2018-19 நிதி ஆண்டில் 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close