[X] Close

இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கூடுதல் கடன்


  • kamadenu
  • Posted: 03 May, 2019 07:57 am
  • அ+ அ-

ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து (ஏடிபி) அதிக கடன் பெறும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டு 300 கோடி டாலர் அளவுக்கு ஏடிபி கடன் வழங்கியுள்ளது.

2019-ம் ஆண்டிலும் இதே அளவுக்கு கடன் வழங்கத் தயாராக இருப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் தகேஹிகோ நாகோ தெரிவித்துள்ளார்.

 ஏடிபி தீவிர கவனம்

1986-ம் ஆண்டிலிருந்து இந்தியாதொடர்ந்து கடன் பெற்று வருகிறது. கடந்த ஆண்டைப் போலவே அதே அளவுக்கு 300 கோடி டாலர் கடன் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றுபிஜியில் நடைபெற்ற 52-வது ஆண்டுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்தியா பெறும் கடன் அளவுக்கும், அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிபிடி) அளவுக்கும் இடையிலான விகிதம் குறைந்து வருகிறது. இதனால் கூடுதலாக கடன் அளிப்பதற்கான சாத்தியம் உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிராமப் பகுதிகளில் இணைப்பு வசதிகளை உருவாக்குவது, நகர்ப்புற மேம்பாடு மற்றும் தனி நபர் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு கடன் வழங்குவதில் ஏடிபி தீவிர கவனம் செலுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

2,160 கோடி டாலர் கடன் 

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட கடன் அளவில் 25 சதவீத அளவுக்கே இந்தியா கடன் பெற்றது. தற்போது 2,160 கோடி டாலர் கடன்  வழங்கவும், மானியம், முதலீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் (1,971 கோடி) அதிகமாகும்.

மணிலாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஆசிய மேம்பாட்டு வங்கி இந்தியாவில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு கடன் வழங்கியுள்ளது. குறிப்பாக பிஹார், இமாச்சலப்பிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு கடன் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

சீனா மேற்கொண்டுள்ள பெல்ட்அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிடையே இணைப்பை ஏற்படுத்தும். இதில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு அதிகபட்ச லாபத்தை ஈட்டித் தரும் திட்டமாக இது அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

முதலீடுகளைப் பொருத்தமட்டில் அதிக லாபம் தரும் திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்வதோடு அது நல்ல திட்டமாக இருக்க வேண்டும். அரசுகளுக்கு கடன் அளித்தபோதிலும் திட்டம் சரியானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா எதிர்ப்பு

இதுவரை கடன் வழங்கப்பட்ட திட்டங்கள் அனைத்துமே சிறப்பானவை, நல்ல லாபம்ஈட்டக் கூடியவை என்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குஉத்தரவாதம் அளிக்கக்கூடிய திட்டங்களாகவும் அவை அமைய வேண்டும் என்றார்.

8  நாடுகளை உள்ளடக்கிய பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு இந்தியா மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா எழுப்பியுள்ள முக்கியமான பிரச்சினையே சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் குறித்ததாகும்.

இது கில்ஜித், பலுசிஸ்தான் பகுதியில் அமைவதாக உள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் இது சர்ச்சைக்குரிய பிராந்தியமாகும். இதனால் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close