[X] Close

ஐஎல் அண்ட் எஃப்எஸ் கணக்குகளை நிர்வகித்து வந்த டிலாய்ட் நிறுவனத்துக்கு 5 ஆண்டுகள் தடை


5

  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 08:00 am
  • அ+ அ-

சமீபத்தில் பெரும் நிதி நெருக்கடியில் திவால் ஆகும் நிலைக்கு ஆளான ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை நிர்வகித்து வந்த டிலாய்ட் நிறுவனத்துக்கு அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நாட்டின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்கள் மற்றும் நிதி சேவைகள் நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்திய வங்கிகளில் ரூ.91 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் ஆகும் நிலைக்கு ஆளாகி, இந்திய வங்கிசாரா நிதி நிறுவனங்கள் துறையையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிட்டு, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை மாற்றி அமைத்து தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை நிர்வகித்து வந்த டிலாய்ட் என்ற நிறுவனத்தின் மீது அரசு கவனம் திரும்பியுள்ளது. இந்நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஐஎல் அண்ட் எஃப்எஸ் கணக்கு விவரங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தில் மொத்தம் 347 துணை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல வெளிநாடுகளிலும் இயங்குபவை. இவற்றின் கணக்குகளில் முரண்பாடுகள் இருப்பதன் மூலம் பெரிய அளவில் நிறுவனத்தின் கணக்குகளில் மோசடி நிகழ்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, டிலாய்ட் நிறுவனத்தின் மீது நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் டிலாய்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியிடம் இதுகுறித்து நீண்ட விசாரணையை தீவிர மோசடி விசாரணைக் குழு நடத்தியது. இந்நிலையில் இந்நிறுவனத்துக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி விவகாரத்தில் அதன் கணக்குகளை நிர்வகித்து வந்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் மிக நீண்ட காலம் தடை செய்யப்பட்ட ஆடிட்டிங் நிறுவனமாக டிலாய்ட் இருக்கும். உலகின் மிகப்பெரிய நான்கு ஆடிட்டிங் சேவை நிறுவனங்களில் ஒன்றாக டிலாய்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close