[X] Close

ஈரான் கச்சா எண்ணெய்: நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா; என்ன செய்யப்போகிறது இந்தியா?


  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 15:54 pm
  • அ+ அ-

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது  பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்தது.

எனினும், இந்தியாவும் தோழமை நாடுகள் சிலவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஈரானிடமிருந்து பெறும் எண்ணெயை வேறு இடங்களிலிருந்து வாங்கிக்கொள்ள ஆறு மாத கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கியது. இனியும் ஈரானுடன் உறவைத் தொடர்ந்தால் சர்வதேச வங்கி நடைமுறை மூலம் கணக்குகள் முடக்கப்படும், டாலர்கள் மூலமான பரிமாற்றத்துக்குத் தடைவிதிக்கப்படும், அமெரிக்காவில் சொத்துகள் முடக்கப்படும் என்றும் எச்சரித்தது. சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை பீப்பாய்க்கு 70 டாலர்கள் என்று ஏப்ரலில் உயர்ந்திருக்கும் நிலையில், இது இந்தியாவுக்குக் கூடுதல் நெருக்கடி.

ஈரானிடமிருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் அல்லது நாங்கள் எடுக்கும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எதிர்கொள்ளுங்கள் என்று அமெரிக்கா விடுத்த எச்சரிக்கைக்கு இந்தியா பணியும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கெடு நாளான மே 2-க்குப் பிறகு ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து, ஹார்மூஸ் நீரிணையைக் கப்பல் போக்குவரத்தை நடத்த முடியாமல் மூடிவிடப்போவதாக ஈரானும் எச்சரித்திருக்கிறது. இதனால், உலக அளவில் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பெரிதும் தடைபடும். எண்ணெய்க் கப்பல்கள் மட்டுமல்ல; பிற சரக்குக் கப்பல்களும் எளிதாகப் போய்ச்சேர முடியாது. வாணிபம் பாதிக்கப்படும், சரக்குக் கட்டணங்களும், அதன் விளைவாக விலைவாசியும் உயரும்.

ASIAIRAN-1jpg.jpg 

கச்சா எண்ணெய் விலை உயரும்?

இந்தியா தன்னுடைய கச்சா பெட்ரோலிய எண்ணெய்த் தேவையில் பெரும் பகுதியை வெளிநாடுகளிடம் வாங்கித்தான் சமாளிக்கிறது. இப்போது  இந்தியாவின் இறக்குமதியில் 10% எண்ணெயை ஈரானிடமிருந்து பெறப்படுகிறது. எண்ணெய் வாங்குவது மட்டுமல்ல; அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களையும் செய்துகொண்டிருக்கிறோம். பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளுக்குச் சென்று வாணிப நடவடிக்கைகளைப் பெருக்கிக்கொள்ள முடியாததால், ஈரானின் சபாஹர் துறைமுகத்தை நவீனப்படுத்திப் பயன்படுத்தும் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டிருக்கிறது இந்தியா.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியவில்லை என்றால் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை மட்டுமே இந்தியா நம்ப வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து வந்த நிலையில் தற்போது தான் நிலைமை சீரடைந்து வருகிறது. அமெரிக்காவின் தடையால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி ஈரான் தவிர மற்ற நாடுகளுக்கு இந்தியா டாலரில் பணம் செலுத்த வேண்டிய சூழல் இருப்பதால் நமது அந்நியச் செலவாணி கையிருப்பும் குறையும்.

இதனால் இந்திய ரூபாய் மதிப்பும் சரிவடையும் ஆபத்து இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரியும் ஆபத்து என்ற இரட்டை பிரச்சினையை இந்தியா எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close