[X] Close

ரிசர்வ் வங்கி கையிருப்பு தொகையை தீர்மானிக்கும் ஜலான் குழு அறிக்கை ஜூன் மாதம் தாக்கல்


  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 08:44 am
  • அ+ அ-

ரிசர்வ் வங்கி தன் வசம் எவ்வளவு சதவீதம் கையிருப்பில் (ரிசர்வ்) வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜலான் குழு தனது அறிக்கையை ஜூன் மாதம் தாக்கல் செய்யும் என தெரிகிறது.

ரிசர்வ் வங்கி எந்த அளவுக்கு உபரி நிதியை வைத்துக் கொள்வது என்பது குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அமைக்கப்பட்ட இக்குழுவின் முதல் கூட்டத்திலிருந்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

ஜலான் தலைமையிலான இக்குழுவில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ராகேஷ் மோகன் துணைத் தலைவராகவும், நிதித்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் என்.எஸ். விஸ்வநாதன் மற்றும் ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினர்களான பாரத் தோஷி, சுதிர் மன்கட் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இக்குழுவின் முதலாவது கூட்டம் ஜனவரி 8-ம் தேதி நடைபெற்றது. இதிலிருந்து 3 மாதங்களுக்குள்ளான கெடு ஏப்ரல் 9-ம் தேதியுடன் முடிவடைந்தது. பணிகள் முடிவடையாததால் இக்குழுவுக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது.

இன்னும் சில கூட்டங்கள் நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளதாக ஜலான் கூறினார். இதனால் ஜூன் மாதம் அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு முன்பு ரிசர்வ் வங்கி இருப்பு குறித்து 1997-ல் வி. சுப்ரமணியம் தலைமையிலான குழு, 2004-ல் உஷா தோரட் தலைமையிலான குழு ஆராய்ந்துள்ளது. 2013-ல் ஒய்.ஹெச் மலேகாம் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளார்.

இதில் சுப்ரமணியம் குழு 12 சதவீத இருப்பு இருந்தால் போதும் என்றும், தோரட் குழுவோ 18 சதவீதத்துக்கும் அதிகமாக வைத்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்திருந்தது. மாலேகாம் குழுவோ ரிசர்வ் வங்கி ஈட்டும் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என பரிந்துரைத்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close