[X] Close

சொத்துகளை முடக்கியது பொருளாதார மரண தண்டனைக்கு இணையானது: நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்கறிஞர் வாதம்


  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 08:43 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

விஜய் மல்லையாவை பொருளாதார குற்றவாளியாக அறிவித்து சொத்துகளை முடக்கியதன் மூலம் பொருளாதார மரண தண்டனையை நீதிமன்றம் வழங்கிவிட்டதாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மல்லையாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் ரஞ்ஜித் மோரே, பாரதி டாங்ரே ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையில் மல்லையாவின் வழக்கறிஞர் அமித் தேசாய், தனது கட்சிக்காரர் சார்பில் இக்கருத்தை பதிவு செய்தார்.

பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பதற்கு சட்டத்தில் சில விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவை முழுமையாக பின்பற்றப்படாமல் கடந்த ஆகஸ்டில் மல்லையாவை பொருளாதார குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் அதற்கான வட்டி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சொத்துகளை விற்று கடனை அடைக்க தயாராக இருந்தாலும், அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. சொத்துகள் மீதான உரிமை முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டது என்றும் இதன் மூலம் பொருளாதார மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு சொத்துகளை முடக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், இதற்கு எவ்வித தீர்ப்பும் வழங்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம் சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவை பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மல்லையா வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் சொத்துகளை முடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிறப்பு நீதிமன்றம் பொருளாதார குற்றவாளியாக அறிவித்ததை எதிர்த்து மற்றொரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான விவாதத்தில் பேசிய அமித் தேசாய், பொருளாதார குற்றவாளி சட்டமானது சர்வாதிகார சட்டமாகும். இது ஜனநாயக விரோதமானது. இந்த சட்டத்தின்மூலம் மத்திய அரசு எவரது சொத்தையும் அவர் குற்றம் செய்யாதவராயிருந்தாலும் முடக்குவதற்கு வழி வகுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

மல்லையா தரப்பு மனுவை எதிர்த்து அமலாக்கத் துறை வழக்கறிஞர் டிபி சிங் ஆஜரானார். இந்த சட்டம் சர்வாதிகார சட்டம் அல்ல என்றும் சுட்டிக் காட்டினார். இந்த சட்டம்தான் புலனாய்வு அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளது, அதிலும் குறிப்பாக சொத்துகளை முடக்க இது வகை செய்துள்ளது என்றார். மேலும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நீதிமன்ற அனுமதி பெற்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

இந்த சட்டமானது மல்லையா போன்றவர்களுக்கானது. இது சாதாரண மக்களுக்கானது அல்ல. ரூ. 100 கோடிக்கு மேல் கடனை பெற்று திரும்ப செலுத்தாதவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இந்த சட்டமே வழிவகுத்துள்ளது என்று சிங் குறிப்பிட்டார். இந்த சட்டம் சர்வாதிகார சட்டம் அல்ல என்பதை நீதிமன்றமே நன்கறியும் என்று சுட்டிக் காட்டினார்.

இந்த சட்டம் சற்று கடுமையானதுதான்; ஆனாலும், இது மிகவும் அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் இதுகுறித்து அரசின் நிலைப்பாட்டை அட்டர்னி ஜெனரல் விளக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close