[X] Close

வரி குறைப்பு சலுகையை பி & ஜி நிறுவனம் அளிக்கவில்லை


  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 08:24 am
  • அ+ அ-

சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலனை மக்களுக்கு அளிக்காமல் ரூ. 250 கோடி வரை பி அண்ட் ஜி நிறுவனம் அளிக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையானது பல்வேறு கட்டங்களில் குறைக்கப்பட்டது. இவ்விதம் குறைக்கப்படும்போதெல்லாம் அதன் பலன் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது. வரி குறைப்பின் பலனாக பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்விதம் பொருள்களின் விலை குறைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு வரி குறைப்புக்குப் பிறகு எந்தெந்த நிறுவனங்கள் பொருள்களின் விலையைக் குறைக்கவில்லை என்பதை ஆராய்ந்தது. இதில் அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள் (எப்எம்சிஜி) தயாரிப்பு நிறுவனமான பிராக்டர் அண்ட் கேம்பிள் இந்தியா நிறுவனம் ரூ. 250 கோடி வரை பொருள்களின் விலையைக் குறைக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. அந்த ஆண்டு நவம்பரில் பொருள் மீதான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் அவ்விதம் குறைக்கப்பட்ட வரியின் பலன் மக்களை சென்றடையவில்லை என்று குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பி அண்ட் ஜி நிறுவன செய்தித் தொடர்பாளர், தங்கள் நிறுவனம் எப்போதுமே பொறுப்பான நிறுவனமாக நடந்து வந்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரி குறைப்புக்குப்பிறகு பொருள்களின் விலை குறைப்புகுறித்து பொதுமக்களுக்கு விளம்பரம் மூலமாக தெரிவித்ததாகவும், இது குறித்து விற்பனையாளர்களுக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பி அண்ட் ஜி நிறுவனம் ஏரியல் சலவை தூள், டைட் சலவை சோப், ஹெட் அண்ட் ஷோல்டர், பான்டீன் ஷாம்பூ, ஓலே, ஜில்லெட் உள்ளிட்ட முகச் சவர பொருள்களும், ஓரல் பி பற்பசை, ஆம்பி புர், பேம்பர்ஸ், விக்ஸ் உள்ளிட்ட பொருள்களை தயாரிக்கிறது. வரி தொடர்பாக உரிய விவரங்களை அளிக்க தங்கள் நிறுவனம் தயார் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close