[X] Close

டிக்-டாக் செயலி மீதான தடை காரணமாக நாளொன்றுக்கு ரூ.3.5 கோடி நஷ்டம்: சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் தகவல்


3-5

  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 08:23 am
  • அ+ அ-

டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சீன நிறுவனத்துக்கு நாளொன்றுக்கு ரூ. 3.5 கோடி (5 லட்சம் டாலர்) நஷ்டம் ஏற்படுவதாக பெய்ஜிங்கைச் சேர்ந்த பைட்டான்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் 250 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அந்நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிக்-டாக் செயலி குறித்து இறுதி தீர்ப்பை ஏப்ரல் 24-க்குள் மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்விதம் உத்தரவு பிறப்பிக்காவிடில் அதன் மீதான தடை நீங்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீன நிறுவனம் உருவாக்கியுள்ள டிக்-டாக் செயலி மூலமாக ஆபாச வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுவதால் சமுதாய ஒழுக்கக் கேடுகள் அதிகரித்து வருகின்றன. எனவே இந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பைட்டான்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனிடையே கடந்த 17-ம் தேதியே கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலி நீக்கப்பட்டது.

உலகின் பிரபலமான செயலியாக டிக்-டாக் திகழ்வதாகவும் இந்தியாவில் 30 கோடி பேர் இதை பயன்படுத்தியதாதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 100 கோடி பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இதை பயன்படுத்துவது தற்போது தடுக்கப்பட்டுள்ளதால் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்நிறுவனமானது உலகின் பிரபலமான ஸ்டார்ட்அப்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் சந்தை மதிப்பு 7,500 கோடி டாலராக உள்ளது. இந்நிறுவன பங்குகள் ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியாவில் தங்கள் செயலியை பயன்படுத்தாத காரணத்தால் நாளொன்றுக்கு ரூ. 3.5 கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும், இது தங்களது நிறுவன பங்குகள் சரிவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும், தங்களது வருமானத்தை பெரிதும் பாதிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கள் செயலி தொடர்ந்து பயன்படுத்தாத நிலை இருப்பதால் தங்கள் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை குறைவதோடு, விளம்பரதாரர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. டிக்-டாக் செயலிக்கு தடை விதிப்பதன் மூலம் தங்கள் செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் தங்கள் செயலியை பதிவிறக்கம் செய்ததாகவும், 60 லட்சம் பேரால் தங்கள் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத சூழல் தற்போது நிலவுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கள் செயலி மூலம் ஆபாசமாக சித்தரிப்பது மிக மிகக் குறைவு என்றும் அத்தகைய வீடியோ பதிவுகளின் எண்ணிக்கை மிக சொற்பமே என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ஜனநாயக அமைப்பில் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளது. இதன்படி இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த தங்கள் செயலியைப் பயன்படுத்தியதாகவும். இதை தடுத்ததன் மூலம் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close