[X] Close

ஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் சந்திப்பு: பங்கு விற்பனைக்கு 5 வாரங்களில் முடிவு எட்டப்படும் என உறுதி


5

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:47 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் நான்கு முதல் ஐந்து வாரங்களுக்குள் தீர்வு காணப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், விமானங்களுக்கு குத்தகை பாக்கி, அன்றாட செயல்பாடுகளுக்கான நிதி இல்லாதது, ஊழியர்களுக்கு சம்பள பாக்கி உள்ளிட்ட பிரச்சினைகளால் கிட்டதட்ட தன்னிடமிருந்த 119 விமானங்களையும் தரையிறக்கிவிட்டது. ஜெட் ஏர்வேஸுக்கு கடன் கொடுத்த வங்கிகள் எஸ்பிஐ தலைமையில் ஒன்றுகூடி நிர்வாகத்தைக் கைப்பற்றின. ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் வங்கிகள் தரப்பு தருவதாக சொன்ன அவசர நிதியைத் தரவில்லை. மேலும், ஊழியர்கள் சம்பள பாக்கியைத் தர வேண்டியும், ஜெட் ஏர்வேஸை மீட்கவும் போராடிவருகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கும் இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிர்வாகக் குழு நிதி அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்து பேசியுள்ளனர். அருண் ஜேட்லி அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்ததோடு நான்கு முதல் ஐந்து வாரங்களில் ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனையில் தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்துள்ளார். அருண் ஜேட்லியைச் சந்தித்த நிர்வாகிகள் இரண்டு விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். முதலாவதாக ஊழியர்களுக்கு உள்ள சம்பள பாக்கியை வழங்குவது, இரண்டாவது ஜெட் ஏர்வேஸ் பங்குகள் விற்பனையை விரைவில் சாத்தியப்படுத்துவது.

இந்தச் சந்திப்பில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மகாராஷ்ட்ரா நிதி அமைச்சர் சுதிர் முங்கத்திவார், ஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரி வினய் துபே, தலைமை நிதி அதிகாரி அமித் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திப்பு குறித்து அமித் அகர்வால் கூறியதாவது, “ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனையை விரைவில் முடிக்க அருண் ஜேட்லியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் 4-5 வாரங்களில் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

அதேபோல் ஊழியர்களுக்கான சம்பள பாக்கியை இடைக்கால அடிப்படையில் வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம். அவர் வங்கிகளுடன் இதுகுறித்து விவாதிப்பதாகக் கூறியுள்ளார்” என்றார். ஆனால், ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா என்பது குறித்து எதுவும் அகர்வால் தெரிவிக்கவில்லை. ஜெட் ஏர்வேஸ் விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. 25 வருடங்களாகப் பணிபுரியும் பலருக்கு இதுதான் வாழ்க்கையே. எனவே, அவர்கள் எப்போது போராட்டத்தைக் கைவிடுவார்கள் என்பதை என்னால் சொல்ல முடியாது” என்றார்.

திவால் நடைமுறை இல்லை

ஜெட் ஏர்வேஸுக்கு வழங்கிய கடனை மீட்க பல்வேறு வழிகளை யோசித்துவரும் வங்கிக் குழு, தற்போதைய பங்கு விற்பனை முயற்சிகள் தோல்வியடைந்தால், திவால் நடவடிக்கைகளுக்கு மாற்றாக வேறு வழிகளைச் செயல்படுத்தும் முயற்சிகளில்தான் உறுதியாக உள்ளது. எதியாட், டிபிஜி கேபிடல், இண்டிகோ பார்ட்னர்ஸ் மற்றும் என்ஐஐஎஃப் ஆகியவை ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது. பங்கு விற்பனை முயற்சி நிறைவு பெறுவதற்கு முன் ஜெட் ஏர்வேஸுக்குச் சொந்தமான சொத்துகளை விற்பதன் மூலமும், அதன் விமானங்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் நிதித் திரட்டும் முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பங்கு விற்பனை முயற்சி வெற்றி பெறும் என்று வங்கிக்குழு நம்புகிறது. அப்படி தோல்வி அடைந்தாலும், திவால் நடவடிக்கைகளுக்கு ஜெட் ஏர்வேஸை உட்படுத்த வங்கிக் குழு விரும்பவில்லை என்பதாகவே தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close