[X] Close

ஜெட் ஏர்வேஸ் வீழ்ச்சிக்கு விஜய் மல்லையா கவலை


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 12:31 pm
  • அ+ அ-

விமான சேவை தொழிலில் அஸ்தனமனத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜெட் ஏர்வேஸின் நிலை தனக்கு கவலை அளிப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் ஏர்லைன்ஸ் நிறு வனங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைவதற்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கிகளிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், பைலட் களுக்கும் பிற ஊழியர்களுக்கும் சம்பளம் தர முடியாமல், விமானங்களுக்கான குத்தகை பாக்கியைத் தர முடியாமல் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி திவாலாகும் இறுதிக் கட்டத்தை ஜெட் ஏர்வேஸ் ஏர்லைன்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

விமான சேவை 112-லிருந்து 10-க்கும் குறைவாக குறைந்தது. விரைவில் முழுவதுமாக சேவைகள் நிறுத்தப்பட்டு நிறுவனத்தை மூடும் நிலை ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரபலமான பெரிய தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனம் இத்தகைய வீழ்ச்சிக்கு ஆளாவது கவலை அளிக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் மல்லையா. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏன் இந்த பாகுபாடு

“கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுக்கு முக்கிய போட்டியாக ஜெட் ஏர்வேஸ் இருந்தது. அத்தகைய பெரிய தனியார் ஏர்லைன்ஸ் இந்த நிலைக்கு ஆளானது வருத்தமளிக்கிறது. ஏர் இந்தியா நிறுவனம் கடனில் மூழ்கி திவாலாகும் நிலைக்கு ஆளான போது ரூ.35 ஆயிரம் கோடி செலவு செய்து மீட்டது அரசாங்கம். ஏன் இந்த பாகுபாடு?

கிங்ஃபிஷர் நிறுவனத்தில் அதிக அளவிலான முதலீடுகளைச் செய்தேன். நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமாக மாற்றினேன். பல விருதுகளை வாங்கிக் குவித்தது. இன்று திவாலாகிய நிலையில் உள்ளது.

நான் வாங்கிய கடனை நூறு சதவீதம் அடைக்கத் தயார் என்று சொல்லி வருகிறேன். ஆனால், அதைப் பெற மறுத்துவிட்டு, கிரிமினல் குற்றவாளியாக ஆக்கிவிட்டார்கள். இதுதான் ஏர்லைன்ஸ் துறையின் விதியா?

இன்று ஜெட் ஏர்வேஸ். நரேஷ் கோயல், அவர் மனைவி நீதா ஆகியோருக்கு என் வருத்தத்தைக் கூறிக்கொள்கிறேன். ஆனால், தொடர்ந்து இந்தியாவில் விமான சேவை நிறுவனங்கள் தோல்வியடைந்து திவால் ஆக என்ன காரணம்?” என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் திவாலாகி வாங்கிய கடன் ரூ.9 ஆயிரத்தை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக, லண்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்துவருகிறார் விஜய் மல்லையா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close