[X] Close

கடந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம்: பிஎம்இஜிபி தலைவர் தகவல்


5-20

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:08 am
  • அ+ அ-

பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ் காதி மற்றும் கிராம தொழில் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்று கேவிஐசி தலைவர் வினய் குமார் சக்ஸேனா தெரிவித்தார். பிஎம்இஜிபி திட்டத்தை 100 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

2014-15-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு போதும் நிர்ணயித்த அளவுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. ஆனால் கடந்த 5 நிதி ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் கேவிஐசி இலக்கின்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.

பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ் காதி மற்றும் கிராம கைத்தொழில் வாரியம் 20,63,152 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மொத்தம் 2,67,226 புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன என்றார்.

2018-19-ம் நிதி ஆண்டில் கேவிஐசி அமைப்பு தான் பிஎம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனமாக நியமிக்கப்பட்டது. மொத்தம் 70,386 திட்டங்கள் ரூ.1,968 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 5,62,351 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

கேவிஐசி-யை பொருத்தமட்டில் இலக்கு 105.05 சதவீதம் எட்டப்பட்டது. மொத்தம் 73,408 புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் ரூ.2,068.31 கோடி செலவிடப்பட்டது. இதன் காரணமாக 5,87,264 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்றார்.

ரூ.20 கோடி வரை மிச்சம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்துவதே பிஎம்இஜிபியின் பிராதன நோக்கமாகும். இது பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு திட்டமாகும். ஜூலை 2016-லிருந்து இது ஆன்லைன் போர்டல் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. கேவிஐசி-யின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இதை உருவாக்கி டிஜிட்டல் இந்தியா திட்டமாக செயல்படுத்துகிறது. கேவிஐசி-யே இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ரூ. 20 கோடி வரை மிச்சமாகியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்தை நியமித்திருந்தால் ரூ. 20 கோடி வரை செலவாகும் என்று சக்சேனா குறிப்பிட்டார்.

ஆன்லைன் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் முழுவதும் வெளிப்படைத்தன்மையோடு விளங்குகிறது. பண பரிவர்த்தனை, மானிய உதவி அனைத்தும் எவ்வித ஒளிவு, மறைவின்றி செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close