[X] Close

இந்தியா 7.2% பொருளாதார வளர்ச்சியை எட்டும்: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உறுதி


7-2

  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:29 am
  • அ+ அ-

நடப்பு நிதி ஆண்டில் (2019-20) இந்தியா 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறினார். வறுமை ஒழிப்பு உள்ளிட்ட சவால்களை எட்டுவதற்கு இந்தியா 8 சதவீதம் மற்றும் அதற்கு மேலான வளர்ச்சியை எட்ட வேண்டியது அவசியம் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆண்டுக் கூட்டத்தில் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியான 7.5 சதவீதத்தை சராசரியாக எட்டி வருகிறது, இருந்தாலும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது என்றார். நிலம் மற்றும் தொழிலாளர் துறையில் சில சீர்திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களில் பிரதானமான விஷயம் வேளாண் சந்தையாகும். இது பெரும்பாலும் மாநில அரசுகளின் கைகளில் உள்ளது. வேளாண் சந்தையில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் விவசாய பொருட்கள் உற்பத்தி மேம்படும். உற்பத்தி பொருள் கெடாமல் பாதுகாக்கப்படும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் தங்களது கொள்கைகளை முற்றிலுமாக மாற்றினால்தான் சீர்திருத்தங்கள் செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வரும் ஸ்திரமற்ற நிலையிலும் நடப்பு நிதி ஆண்டில் 7.2 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டிய சவாலான சூழல் இந்தியாவுக்கு உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக அதிகரிக்கும் பண வீக்கம் குறித்த விவரங்கள் மிகைப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கச்சா எண்ணெய் உயர்ந்து பிறகு குறையும் போது பண வீக்கம் கட்டுக்குள் இருக்கும் சூழலிலேயே உள்ளது என்று குறிப்பிட்டார். இருப்பினும் தொடர்ந்து கச்சா எண்ணெய் உயர்ந்தால் அது பணவீக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அது எந்த அளவுக்கு ஸ்திரமாக உயர்கிறது என்பதைப் பொருத்தே பணவீக்க அளவு இருக்கும் என்றார்.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்குமாயின் அது நிச்சயம் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும். அதேபோல நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கும். இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவடையும். சமீபத்தில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் வங்கித் துறையில் நிலவும் சிக்கல், ஏற்றுமதியில் காணப்படும் மந்த நிலை ஆகியவை இந்தியாவின் வளர்ச்சியை மந்தமடையச் செய்துள்ளன என்றார்.

தொடர்ந்து இரண்டு தவணைகளாக கால் சதவீதம் என்ற அளவில் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான நோக்கமே வளர்ச்சியை தூண்டுவதுதான். பேரியல் பொருளாதார நிதியை ஸ்திரப்படுத்துவது மற்றும் விலையை ஸ்திரப்படுத்துவதும்தான் ஆர்பிஐ-யின் பிரதான பணிகளாக உள்ளன என்றார்.

ஏற்கெனவே 7.4 சதவீத வளர்ச்சி இலக்கு, பின்னர் 7.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டதற்கு காரணமே சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார சூழல்தான் என்றார். சர்வதேச சூழலில் ஸ்திரமான போக்கு நிலவினால் அடுத்து வரும் மாதங்களில் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை நிச்சயம் ரிசர்வ் வங்கி எடுக்கும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close