[X] Close

ஜெட் ஏர்வேஸ் விவகாரம்: பிரதமர் அலுவலகம் அவசர ஆலோசனை


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 09:11 am
  • அ+ அ-

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிலைமை குறித்து ஆராய பிரதமர் அலுவலகம் நேற்று மாலை அவசர கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டம் பிரதமரின் முதன்மைச் செயலர் தலைமையில் நடைபெற்றது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக 20-க்கும் குறைவான விமானங்களை இயக்குவதாக அறிவித்தது. இத்தகைய சூழல் குறித்து ஆராயுமாறு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். துறையின் செயலர் இது குறித்து ஆராயுமாறு உத்தரவிட்டிருந்தார். இவ்விதம் உத்தரவிட்ட ஒரு மணி நேரத்தில் பிரதமர் அலுவலகம் சார்பில் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சர்வதேச விமான சேவையை ரத்து செய்ததோடு உள்நாட்டில் பல விமானங்களை ரத்து செய்தது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். நேற்று மும்பை விமான நிலையத்தில் பெருமளவிலான பயணிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன டிக்கெட் மையத்தை முற்றுகையிட்டனர். இதனிடையே தங்களது நிறுவனத்தை காப்பாற்றி தங்களது வேலையையும் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு மும்பை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிறுவனம் மூடப்பட்டால் 16 ஆயிரம் பணியாளர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்றும், இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

வெள்ளி விழாவை கொண்டாடிய ஜெட் ஏர்வேஸ் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இது தொடர்ந்து செயல்பட வங்கியாளர்களுடன் பேச்சு நடத்துவதாக தெரிகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நடத்துவதற்காக விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்கான கடைசி தேதி நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

எந்தெந்த நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன என்ற விவரம் பிறகுதான் தெரியவரும்

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close