[X] Close

சீனா வழங்கும் கடன்கள்; வளரும் நாடுகளுக்கு பெரும் நெருக்கடி: ஐஎம்எஃப் தலைவர் கிறிஸ்டியானா லகார்டே எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 09:08 am
  • அ+ அ-

வளரும் நாடுகளுக்கு சீனா வழங்கும் கடன்களால் மிகப்பெரிய அளவில் நெருக்கடி உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியானா லகார்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனா தனது பிரம்மாண்ட ‘பெல்ட் அண்ட் ரோட்’ என்ற சர்வதேச ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் வளரும் நாடுகளுக்கு கடன் வழங்கி வருகிறது. அதாவது, கடனில் அந்த நாடுகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காக அந்தந்த நாடுகளோடு குறிப்பிடத்தகுந்த அரசியல் பொருளாதார ஒப்பந்தங்களையும் செய்துகொள்கிறது.

சீனாவின் இந்த செயல்பாடு வளரும் நாடுகளுக்கு நெருக்கடியை உண்டாக்கலாம் என ஐஎம்எஃப், உலக வங்கி உள்ளிட்டவை எச்சரிக்கை விடுக்கின்றன. ஐஎம்எஃப் தலைவர் கிறிஸ்டியானா லகார்டே கூறுகையில், “சீனாவின் கடன்கள் வளரும் நாடுகளுக்கு நெருக்கடியை உண்டாக்கலாம். எனவே அந்தந்த நாடுகளின் கடன் விவரங்கள், அதற்காக அவை செய்துகொண்டுள்ள நிபந்தனை ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றில் வெளிப்படைத்தன்மையை ஐஎம்எஃப், உலக வங்கி வலியுறுத்துகிறது. நாடுகளுக்கிடையிலான கடன் உடன்படிக்கைகள் சர்வதேச விதிமுறைகளின்படி இருப்பது அவசியம். ஏனெனில், கடன் தொடர்பான பிரச்சினைகள் உருவாகும்போது எடுக்கப்படும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் என்பது மிகவும் கடினமானவை. எளிதில் தீர்வு காணப்பட முடியாதவை. அது மேலும் பல பிரச்சினைகளை உண்டாக்கிவிடும்” என்று கூறினார்.

உலக வங்கி தலைவராக பொறுப்பேற்றுள்ள டேவிட் மால்பாஸ் இதுகுறித்து கூறுகையில், 17 ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கெனவே உச்சகட்ட கடன் நெருக்கடியில் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் நாடுகளுக்கிடையிலான கடன் உடன்படிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

மேலும், கடன்கள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பது உண்மை. ஆனால், அது வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் என்பது நினைத்துப்பார்க்க முடியாததாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close