[X] Close

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை விற்க தீவிரம் காட்டும் எஸ்பிஐ


75

  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 08:36 am
  • அ+ அ-

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை விற்பதற்கான முயற்சியில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஈடுபட்டுள்ளது. இதற்காக விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து டெண்டர்களை பெறுவதாக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இது தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏற்று நடத்துவதற்கு தகுதிபடைத்த நிறுவனங்களுடன் எஸ்பிஐ பேச்சு நடத்தி வருகிறது. இவ்விதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏற்று நடத்த விருப்பமுள்ள நிறுவனங்கள் பற்றிய விவரம் புதன்கிழமை (ஏப். 10) தெரியவரும். ஏனெனில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமம், இண்டிகோ, எதியாட், கத்தார் ஏர்வேவஸ் (எதியாட் முழுமையாக வெளியேறும்பட்சத்தில்), ஏர் பிரான்ஸ் கேஎல்எம் டெல்டா, அதானி குழுமம், என்ஐஐஎப் மற்றும் சில பெரு முதலீட்டாளர்கள் ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

எஸ்பிஐ கூட்டமைப்பானது 3.54 கோடி சம பங்குகள் அதாவது, மொத்த மூலனத்தில் 31.2 சதவீத பங்குகள் அல்லது அதிகபட்சம் 8.5 கோடி பங்குகள் (அதிகபட்சம் 75% பங்குகள்) விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பல்வேறு வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளது. அவற்றை திரும்ப செலுத்த முடியாத அளவுக்கு அது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதைஅடுத்தே கடன் அளித்த வங்கிகள் எஸ்பிஐ தலைமையில் ஒன்றிணைந்துள்ளன. இவை ஒன்றிணைந்து ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை கையிலெடுத்துள்ளன. இந்நிறுவன பங்குகளை விற்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட் லிமிடெட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மொத்தம் அளித்துள்ள கடன் தொகை ரூ.8,200 கோடியாகும். இது தவிர ஊழியர்களுக்கு சம்பள பாக்கி மற்றும் விமானங்களுக்கான குத்தகை பாக்கி (லீஸ் தொகை) செலுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குள்ள மொத்த கடன் சுமை ரூ. 20 ஆயிரம் கோடியாகும். இதனால் அன்றாட செயல்பாடுகளுக்கே போதிய நிதி இல்லாத சூழலில் நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவிப்பது (இஓஐ) மற்றும் நிறுவன நிர்வாகத்தை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்வது என்ற வகையிலான முதலீட்டாளர்களை எதிர்நோக்கியுள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் நிறுவனத்தை நடத்துவதற்கான விருப்ப மனுவை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1,000 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை முதலீடு செய்வதற்கேற்ற திறன் படைத்தவர்கள், இத்துறையில் 3 ஆண்டு அனுபவம் மிக்கவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலர் ஒன்றிணைந்து குழுவாக இந்த விமான நிறுவனத்தை எடுத்து நடத்த விரும்பினாலும், குழுவில் மூன்று பேருக்கு மேல் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் வசம் 124 விமானங்கள் இருந்தன. அவற்றில் இப்போது 26 விமானங்களே இயக்கப்படுகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close