[X] Close

இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டாம்; விஜய் மல்லையாவின் மனுவை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 08:37 am
  • அ+ அ-

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டாம் என்று லண்டன் நீதிமன்றத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று இங்கிலாந்தில் வாழும் விஜய் மல்லையா, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவரை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பாக இங்கிலாந்தின் உள்துறைச் செயலர் சாஜித் ஜாவித் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை எதிர்த்து விஜய் மல்லையா தரப்பில் பிப்ரவரி 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் அளிக்க 20 நாள் அவகாசம் உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கீழ் நீதிமன்றம் விஜய் மல்லையாவின் மனுவை நிராகரித்தது.

இங்கிலாந்திலேயே மல்லையா இருப்பதற்கு போதிய விவரங்கள் மனுவில் குறிப்பிடப்படவில்லை என விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவரது வழக்கை விசாரித்து வரும் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஏற்கெனவே கடந்த டிசம்பரில் நாடு கடத்துவது தொடர்பான உத்தரவில் மல்லையாவின் கோரிக்கை ஏற்க முடியாது என நிராகரித்துவிட்டது.

இருந்தாலும் இது தொடர்பாக மல்லையா முறையீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் 1993-ம் ஆண்டு சூரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய டைகர் ஹனீப் என்பவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இதுபோன்ற நீதிமன்ற உத்தரவுகள் தொடர்ந்து மேல் முறையீடு செய்யப்பட்டு வருகின்றன. 2013-ம் ஆண்டே சட்ட ரீதியாக அவரை இந்தியாவுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் தொடர்ந்து முறையீடு செய்வதால் ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close