[X] Close

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எவ்விதத்திலும் வங்கிகளின் உரிமையை பாதிக்காது: திவால் நடைமுறை ஆணைய தலைவர் தகவல்


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 08:53 am
  • அ+ அ-

வாராக்கடன் வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் திவால் நடைமுறைகள் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பானது கடன் நிறுவனங்களின் உரிமையை பாதிக்காது என்று திவால் நடைமுறை ஆணையத் தலைவர் எம் எஸ் சாஹூ கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி கடந்த வருடம் பிப்ரவரியில் வங்கிகளுக்கு திவால் நடவடிக்கை குறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதாவது, ரூ. 2000 கோடிக்கும் மேல் வாராக்கடன்கள் வைத்துள்ள நிறுவனங்கள், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசமாக தரப்பட்டுள்ள 180 நாட்களைத் தாண்டி ஒரு நாள் ஆனாலும், திவால் நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என அதில் கூறியது. ரிசர்வ் வங்கியின் இந்தச் சுற்றறிக்கை பல பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக இருந்ததால் அவை போர்க்கொடி தூக்கின. முக்கியமாக மின் உற்பத்தி நிறுவனங்கள் பலவும் இதற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகின.

எனவே உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்வதாக உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு வாராக்கடனை மீட்பதில் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில் திவால் நடைமுறை ஆணையத்தின் தலைவர் எம் எஸ் சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “உச்சநீதிமன்ற தீர்ப்பு எந்த வகையிலும் கடன் நிறுவனங்களின் திவால் நடவடிக்கையை எடுக்கும் உரிமையை பாதிக்காது. அதேசமயம், திவால் சட்டத்தில் உள்ள விதிமுறைகளையும் எந்த வகையிலும் பாதிக்காது. மாறாக, திவால் நடவடிக்கைகளை எடுக்கும் அணுகுமுறையிலும், எதிர்வினைகளிலும் அதிகப் பொறுப்புடன் நடந்துகொள்வதற்கான மாற்றத்தை உண்டாக்குவதாக மட்டுமே இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.

அதன்படி இந்தத் தீர்ப்பின் மூலம், கடன் நிறுவனங்கள் வாராக்கடன் உள்ள ஒரு நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கையை எடுக்கலாமா என்பது குறித்து தன்னைத்தானே முதலில் கேள்விகேட்டுக் கொள்ள வேண்டும். திவால் நடவடிக்கையை எடுப்பதற்கான அல்லது எடுக்கப்படாததற்கான சரியான காரணங்களை வங்கிகள் அறிந்துகொண்டிருக்க வேண்டும்” என்றார்.

திவால் சட்டத்தின் விதிமுறைகளைச் செயல்படுத்தும் அதிகாரம் திவால் நடைமுறை ஆணையத்துகு உள்ளது. ஆணையத்தின் தலைவரே விளக்கம் அளித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து வங்கிகளும் பிற கடன் நிறுவனங்களும் பெரிய அளவில் கவலைப்பட வேண்டியதில்லை என்பது தெளிவாகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close