[X] Close

லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைகிறது இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ்


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 08:21 am
  • அ+ அ-

வீட்டுக் கடன் வழங்கும் தனியார் நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (ஐபிஹெச்எப்எல்) நிறுவனம் தென்னிந்தியாவைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கியுடன் (எல்விபி) இணைகிறது. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் நிறுவனத்துக்கு ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளும், ரூ. 41 ஆயிரம் கோடி அளவிலான சந்தை மூலதனமும் உள்ளன.

இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களும் இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இரு நிறுவனங்களும் இணைந்த பிறகு 100 லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளுக்கு இணைப்புக்குப் பிந்தைய நிறுவனத்தின் 14 பங்குகள் வழங்கப்படும்.

இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக இரு நிறுவனங்களின் பங்குதாரர்களது ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதாவது மூன்றில் இரண்டு பங்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இணைப்பு ஏற்கப்படும். அதன்பிறகு ரிசர்வ் வங்கி ஒப்புதலுக்குப் பிறகு பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி-யின் அனுமதி பெறப்படும். அதன் பிறகு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) ஒப்புதல் பெற வேண்டும்.

இணைப்புக்குப் பிறகு இந்தியாபுல்ஸ் லட்சுமி விலாஸ் வங்கி என்ற பெயரில் செயல்படும். இப்போது ஐபிஹெச்எப்எல் நிறுவனத் தலைவராக உள்ள சமீர் கெலாட் இணைப்பு நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்பார். அதேபோல இந்தியாபுல்ஸின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள ககன் பாங்கா மற்றும் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி ஆகியோ இருவரும் இணைப்பு நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர்களாக பொறுப்பேற்பர். இணைப்புக்குப் பிறகு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 19,500 கோடியாக (டிசம்பர் 2018 மதிப்பீட்டின்படி) இருக்கும். இப்போதைக்கு இணைப்பு நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு எவர் பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை.

இணைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேறினால், வங்கியுடன் ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம் (என்பிஎப்சி) இணைவது கடந்த 18 மாதங்களில் நான்காவது நிகழ்வாக இருக்கும். 2017 அக்டோபரில் இண்டஸ்இந்த் வங்கி, பாரத் பைனான்சியல் நிறுவனத்துடன் இணைந்தது. 2018 ஜனவரியில் ஐடிஎப்சி வங்கி மற்றும் கேபிடல் பர்ஸ்ட் நிறுவனங்கள் இணைந்தன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பந்தன் வங்கியுடன் கிரஹ் பைனான்ஸ் நிறுவனம் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாபுல்ஸ் நிறுவனத்தை மறு சீரமைப்பதற்கான குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா பொறுப்பேற்றிருந்தார். நிறுவனத்தை சீரமைப்பதில் இணைப்பு நடவடிக்கையையும் இக்குழு பரிந்துரைத்தது.

20 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட இந்தியாபுல்ஸ் நிறுவனம் வட மாநிலங்களில் மிகவும் பிரபலமானதாகும். 95 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட எல்விபி தென் மாநிலங்களில் மிகவும் பிரபலமான வங்கியாகும். எல்விபி தற்போது 569 கிளைகளுடனும், ஐபிஹெச்எப்எல் 250 கிளைகளுடனும் செயல்படுகிறது. இணைப்புக்குப் பிறகு ஐபிஹெச்எப்எல் நிறுவன பங்குதாரர்கள் வசம் 90.5% பங்குகள் செல்லும். எல்விபி பங்குதாரர்கள் வசம் 9.5% பங்குகள் இருக்கும். இணைப்புக்குப் பிறகுஐபிஹெச்எப்எல் நிறுவனர் கெலாட்டின் பங்கு 21.5 சதவீதத்திலிருந்து 19.5 சதவீதமாகக் குறையும். இணைப்புக்குப் பிறகு தனது பங்குகளை 15% அளவுக்குக் குறைக்க கெலாட் ஒப்புக் கொண்டுள்ளார். வங்கியில் தனி நபர்கள் 15% அளவுக்கு பங்கு வைத்துக் கொள்ள மட்டுமே ஆர்பிஐ விதிமுறைகள் அனுமதிக்கும்.

சமீபத்தில்தான் ஐபிஹெச்எப்எல் நிறுவனம் ரூ. 26 ஆயிரம் கோடி கடன் திரட்டப் போவதாக அறிவித்திருந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close