[X] Close

இந்தியாவில் உலக வர்த்தக அமைச்சர்கள் கூட்டம்


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 08:06 am
  • அ+ அ-

உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) அங்கம் வகிக்கும் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தை இந்தியாவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டபிள்யூடிஓ அமைப்பில் 20 நாடுகள் அங்கம் வகிக்கும் அமைச்சர்களிடையிலான ஆலோசனை கூட்டத்தை அடுத்த மாதம் இந்தியாவில் நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக அமைப்பு தேவைதானா என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ள நிலையிலும், பல்வேறு நாடுகள் வர்த்தக பாதுகாப்பு அமைப்புகளை எடுத்துவரும் நிலையிலும் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மே மாதம் இந்தக் கூட்டத்தை நடத்தவும், இக்கூட்டத்துக்கு 20 டபிள்யூடிஓ உறுப்பு நாடுகளின் அமைச்சர்களை அழைக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வர்த்தகப் போர் உருக்கு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா அதிக வரி விதித்ததைத் தொடர்ந்து வர்த்தகப் போர் மூண்டுள்ளது. இதுகுறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

சர்வதேச வர்த்தகத்தில் நிலவும் கடுமையான சவால்கள் குறித்து டபிள்யூடிஓ அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற வர்த்தகத்தை விட 2020-ம் ஆண்டு மிகவும் குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது. பொருளாதாரத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் அமெரிக்கா, சீனா இடையே நிலவும் வர்த்தகப் போர் உள்ளிட்டவை முக்கிய காரணியாக இருக்கும் என்று தெரிகிறது.

சர்வதேச வர்த்தகத்துக்கு டபிள்யூடிஓ அமைப்பு அவசியம் என்று இந்தியா வலியுறுத்தும் என்று தெரிகிறது.

பியூனஸ் அயர்ஸில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற அமைச்சர்களிடையிலான கூட்டம் பாதியில் முடிவடைந்தது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 50 நாடுகள் பங்கேற்றன. அந்தக் கூட்டத்தில் டபிள்யூடிஓ விதிமுறைகளில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து நாடுகளிடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா கோரியிருந்தது.

இ-காமர்ஸ் கொள்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதற்கான புதிய விதிமுறைகள் இணையதளத்தில் பொதுமக்கள் கருத்துக்காக பதிவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து சிறு வர்த்தகர்கள் முதல் பெரிய வர்த்தகர்கள் வரை தெரிவிக்கும் அனைத்து எதிர்ப்புகளும் கவனிக்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close