[X] Close

சிங்கப்பூர் தீர்ப்பாயத்தின் உத்தரவு மீறப்பட்டிருந்தால் சிங் சகோதரர்களுக்கு சிறை: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 08:04 am
  • அ+ அ-

ஜப்பானின் மருந்து தயாரிப்பு நிறுவனமான டெய்சி சாங்யோ நிறுவனத்துக்கு தர வேண்டிய நிலுவை பாக்கி தொடர்பாக ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர்களான சிங் சகோதரர்கள் (மல்வீந்தர் சிங், ஷிவிந்தர் சிங்) சிங்கப்பூர் தீர்ப்பாய உத்தரவை மீறியிருந்தால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெய்சி சாங்யோ நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்காததால் அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகியது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ரான்பாக்ஸி தரப்பில் கூறப்பட்ட விளக்கங்களுக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.

தீர்ப்பாய உத்தரவுகள் சரியான வகையில் பின்பற்றப்படவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். இதற்காக அவர்களிருவரும் சிறைக்கு அனுப்பப்படுவர் என்று நீதிபதிகள் கூறினர். இந்த உலகில் பாதியளவு சிங் சகோதரர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம். ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தொகையை எவ்விதம் திரும்ப செலுத்தப் போகிறீர்கள் என்பதற்கு தெளிவான திட்ட அறிக்கை ஏதும் உங்களிடம் இல்லை. ஒருவர் ரூ. 6 ஆயிரம் கோடி தர வேண்டும் என்கிறீர்கள், அந்தத் தொகை இங்கும் இல்லை, அவர்களிடத்திலும் இல்லை என்றால் என்ன அர்த்தம் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

சிங்கப்பூர் தீர்ப்பாயம் கடந்த மார்ச் மாதம் ரூ. 3,500 கோடியை டெய்சி சாங்யோ நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

நாட்டின் மருந்து தயாரிப்பில் மிக முன்னணி நிறுவனமாக திகழ்ந்ததாகக் கூறப்படும் ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர்கள் இவ்விதம் செயல்படுவது நல்லதல்ல என்றும் நீதிபதிகள் கூறினர்.

2008-ம் ஆண்டு ரான்பாக்ஸி நிறுவனத்தை டெய்சி சாங்யோ நிறுவனம் வாங்கியது. அப்போது ரான்பாக்ஸி நிறுவனம் மீது அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை (யுஎஸ்எப்டிஏ) விசாரணை மேற்கொண்டுள்ளது என்ற விவரத்தை சிங் சகோதரர்கள் மறைத்து பங்குகளை விற்றுவிட்டதாக சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் டெய்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close