[X] Close

வெற்றிபெறும் புதிய அரசு தொழில் கொள்கையை வெளியிடும்: வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 09:16 am
  • அ+ அ-

புதிய தொழில் கொள்கையை மத்தியில் பொறுப்பேற்கும் புதிய அரசு வெளியிடும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

தொழில் கொள்கை தொடர்பான அனைத்து அம்சங்களும் தயார். புதிய அரசு இதை அறிவிக்கும் என நம்புவதாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

தமது அமைச்சகம் புதிய தொழில் கொள்கை குறித்த விவரங்களை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி யுள்ளது என்றார். புதிய தொழில்கொள்கையில் விரைவான வளர்ச்சி வாய்ப்புள்ள தொழில்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள தொழில்களை நவீனமயமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொழில் துறையில் அதிகார குறுக்கீடுகளைக் குறைக்கும் வகையிலும், காகித பரிவர்த்தனையை குறைக்கும் வகையில் மின்னணு பரிமாற்றம் இருக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளை கண்காணிக்க ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கு முன்பு 1956-ம் ஆண்டிலும், 1991-ம்ஆண்டிலும் தொழில் கொள்கைகள் வெளியாயின. இப்போது வெளியாகவிருப்பது 3-வது தொழில் கொள்கையாக இருக்கும். அந்நிய நேரடி முதலீடுகளை (எப்டிஐ) ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையில் உத்திகள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 7 சதவீதம் குறைந்து 3,350 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதியை ஊக்குவிக்க தமது அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக் காட்டிய அவர் மாவட்ட அளவில் தொழில் புரிவதை எளிதாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

ஏற்றுமதி அதிகரிக்க திட்டம்

2018-19-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் சேவைத் துறை வருமானம் 54,000 கோடி டாலராக இருக்கும் என்றார். நாட்டின் ஏற்றுமதி 8.85 சதவீதம் அதிகரித்து 29,847 கோடி டாலராக உள்ளது என்றார். ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையான காலத்தில் இந்த அளவு எட்டப்பட்டதாக அவர் கூறினார். ஸ்டார்ட் அப்நிறுவனங்கள் பலவும் திருத்தி யமைக்கப்பட்டுள்ளன. புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close