[X] Close

119-லிருந்து 13-ஆக குறைந்தது ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்: விமானப் போக்குவரத்து துறை செயலர் தகவல்


119-13

  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 10:16 am
  • அ+ அ-

நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தற்போது 15-க்கும் குறைவான விமானங்களையே இயக்குகின்றன என்று விமானப் போக்குவரத்து துறை செயலர் பி எஸ் கரோலா தெரிவித்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு சவால்களைச் சந்தித்துவருகிறது. ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, பெரும்பாலான விமான சேவைகள் ரத்து உள்ளிட்ட பிரச்சினைகளில் உள்ளது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸுக்கு கடன் கொடுத்தவர்கள் எஸ்பிஐ தலைமையில் ஒன்றிணைந்து ஜெட் ஏர்வேஸை மீட்க முடிவெடுத்தனர்.

அதன்படி, ஜெட் ஏர்வேஸ் தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயலை விலகச் செய்து, நிர்வாகத்தை எஸ்பிஐ தலைமையிலான கடன் நிறுவனங்கள் குழு கைப்பற்றியது. ரூ.1,500 கோடி முதலீடு செய்வதாக ஒப்புக்கொண்டதன்படி நிறுவனத்தின் நிர்வாகம் கைமாற்றப்பட்டது. நரேஷ் கோயல், அவரது மனைவி மற்றும் நாமினி இயக்குநர்கள் என நிர்வாகத்திலிருந்து பலரும் பதவி விலகிஉள்ளனர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பாக தற்போது இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை எத்தனை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விமானப் போக்குவரத்து துறை செயலர் பதிலளி்த்துள்ளார். “செவ்வாய் வரை 28 விமானங்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், அன்று மேலும் 15 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டன. எனவே தற்போது 15-க்கும் குறைவாகவே விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த விவகாரம் வங்கியாளர்களுக்கும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தினருக்கும் இடையிலானது. அவர்கள் இதுகுறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார். ஜெட் ஏர்வேஸ் 119 விமானங்களை இயக்கி வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களில் அதன் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. விமானங்கள் குத்தகைதாரர்களுக்கு நிலுவைத் தொகை இருப்பதால் பெரும்பாலான விமானங்களின் சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close