[X] Close

வாராக்கடனை வசூலிப்பதில் புதிய சட்டம் தேவை: நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் கந்த் கருத்து


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 10:13 am
  • அ+ அ-

கடன் வாங்கியவர்கள் உரிய நேரத்தில் அதைத் திருப்பிச் செலுத்த வழி செய்யும் வகையிலான சட்டங்களை அரசும், ரிசர்வ் வங்கியும் வகுக்க வேண்டும் என நிதி ஆயோக் தலைமை நிர்வாகி அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் வருமான உத்தரவாத திட்ட அறிவிப்புகளை அள்ளிவிடுகின்றன. ஆனால், அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் இருப்பது அவசியம். ஆனால், வங்கிகள் கொடுக்கிற கடன்கள் எல்லாம் வாராக்கடன்களாக மாறினால் இந்த சலுகை திட்டங்களையெல்லாம் எப்படி செயல்படுத்த முடியும் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

காரணம், வங்கிகள் வழங்கும் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாததால் அவை பொருளாதாரத்தில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் வளர்ச்சியும் கணிசமாக பாதிக்கிறது. இந்நிலையில்,செவ்வாய் அன்று ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரியில் வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். அந்தச் சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருப்பது, ரூ. 2000 கோடிக்கும் மேல் உள்ள கடன்கள், திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசமாக தரப்பட்டுள்ள 180 நாட்களைத் தாண்டி ஒரு நாள் ஆனாலும், திருப்பிச் செலுத்தப்படாத கடனை வாராக்கடனாக பாவித்து திவால் நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.

இதற்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் குறிப்பாக மின் உற்பத்தி நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளன. இதை விசாரித்த நீதிமன்றம் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்தது. இது குறித்து நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் கந்த் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “வாராக்கடன்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், ரிசர்வ் வங்கியும், அரசும் வாராக்கடன் பிரச்சினையை தீவிரமாக ஆய்வு செய்து புதிய சட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கடன் வாங்கியவர்கள் கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். கடன் பெறுவோர்களிடம் அதைத் திருப்பிச் செலுத்தும் ஒழுக்கமான போக்கு உறுதிசெய்யப்பட வேண்டும். ஏனெனில் நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு வாராக்கடன்கள் மீட்கப்படுவதும், வாராக்கடன்கள் அதிகரிக்காமல் தடுக்கப்படுவதும் மிகவும் அவசியம். இது மிக நீண்ட நெடிய செயல்முறை. இதற்காக அரசும் ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close