[X] Close

நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.4.42 லட்சம் கோடி கடன் வாங்க அரசு திட்டம்


4-42

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 07:50 am
  • அ+ அ-

நிதிப் பற்றாக்குறையை சரிக்கட்ட மத்திய அரசு ரூ. 4.42 லட்சம் கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் 11 மாதங்களில் திருத்திய மதிப்பீட்டின்படி நிதிப் பற்றாக்குறை 134% ஆக உள்ளது. இதனால் வரும் நிதி ஆண்டில் (2019-20) பட்ஜெட் மதிப்பீட்டில் குறிப்பிட்ட பற்றாக்குறை அளவில் 62 சதவீத அளவுக்கு முதல் அரையாண்டில் (ஏப்ரல் முதல் செப்டம்பர்) கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசின் வருமானத்துக்கும் செலவினத்துக்கும் இடையிலான இடைவெளி காரணமாக ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை இதன் மூலம் சரிக்கட்ட அரசு முடிவு செய்துள்ளது.

பொதுவாக நிதி ஆண்டு தொடக்கத்தில் வரி வருமானம் போதிய அளவுக்கு இருக்காது. இதனால் செலவினங்களை சமாளிக்க போதிய நிதி ஆதாரங்களை அரசு திரட்டுவது வழக்கம். அந்த வகையில் இப்போது முதல் அரை ஆண்டிலேயே இந்த நிதியைத் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நிதிப் பற்றாக்குறையை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3.4 சதவீத அளவுக்குள் (ரூ.6.34 லட்சம் கோடி) கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. கடன் வாங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகுதான் வாங்கப் போகும் கடன் அளவான ரூ.4.42 லட்சம் கோடி அதாவது மொத்த தொகை ரூ.7.10 லட்சம் கோடியில் 62.3 சதவீதம் திரட்டப் போவதாக பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக கடன் வாங்குவதால் திரும்ப செலுத்த வேண்டிய அளவு அதிகமாக இருக்கும். இது ஐந்து ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் இருக்கும் என்று அவர் கூறினார்.

நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ. 1.02 லட்சம் கோடியை அரசு திரும்ப செலுத்தும். இதனால் வாங்கும் கடன் அளவு ரூ. 3.40 லட்சம் கோடியாக இருக்கும். இரண்டாம் அரையாண்டில் கடன் பெறும் தொகை ரூ.2.68 லட்சம் கோடியாக இருக்கும். இதில் ரூ.85 ஆயிரம் கோடி திரும்ப செலுத்தும் தொகையாக இருக்கும்.

இதற்கேற்ப வெளியிடப்படும் கடன் பத்திரங்கள் 1, 2, 5, 7 மற்றும் 10 ஆண்டுகளில் முதிர்வடையும் வகையில் வெளியிடப்படும். அதிகபட்சம் 40 ஆண்டுகளில் முதிர்வடைவதாக இருக்கும்.

இதனிடையே மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்ட தகவலில் பற்றாக்குறை 11 மாதங்களில் ரூ.8.51 லட்சம் கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இது திருத்திய மதிப்பீடான ரூ. 6.34 லட்சம் கோடியை விட அதிகமாகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close