[X] Close

ஆர்இசி பங்குகளை வாங்கியது பிஎஃப்சி


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 08:05 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

பொதுத் துறை நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றொரு பொதுத் துறை நிறுவனமான ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஆர்இசி) நிறுவனப் பங்குகளை ரூ.14,500 கோடிக்கு வாங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் நடப்பு நிதி ஆண்டில் அரசு பங்கு விலக்கல் மூலம் எட்ட நிர்ணயித்துள்ள ரூ. 80 ஆயிரம் கோடி எட்டப்பட்டுள்ளது.

ஆர்இசி நிறுவனத்தில் அரசுக்குள்ள 52.63 சதவீத பங்குகளை ரூ. 14,500 கோடிக்கு பிஎஃப்சி நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான மொத்த தொகையும் ஆர்டிஜிஎஸ் மூலமாக நேற்று பரிவர்த்தனை செய்யப்பட்டது. இது தொடர்பான ஆர்டிஜிஎஸ் சலானை பிஎஃப்சி தலைவர் ராஜீவ் சர்மா மத்திய மின்துறைச் செயலர் ஏ.கே. பல்லாவிடம் வழங்கினார்.

மொத்த தொகையை பிஎஃப்சி நிறுவனம் பாங்க் ஆஃப் பரோடா, ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி), பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உள்ளிட்டவற்றிலிருந்து கடனாகப் பெற்றுள்ளது.

கடந்த 20-ம் தேதி ஆர்இசி நிறுவனத்தின் 103.94 கோடி பங்குகளை ஒவ்வொன்றும் ரூ. 10 முக மதிப்பில் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இதன் அடிப்படையில் 52.63 சதவீத பங்குகள் மாற்றப்பட்டன.

பொதுத் துறை நிறுவனங்களில் பிஎப்ஃசி, ஆர்இசி இரண்டுமே நவரத்னா நிறுவனங்களாகும். இவ்விரண்டு நிறுவனங்களின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரம் கோடியாகும். நிறுவன பங்குகளை வாங்கியதன் மூலம் இவை ஒருங்கிணைக்கப்பட்டு மேலும் வலுப்பெற்றுள்ளன.

இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையில் ஒரு பங்கு ரூ. 139.50 என்ற விலையில் ரூ. 14,500 கோடிக்கு ஆர்இசி பங்குகளை பிஎஃப்சி வாங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தையில் இவ்விரு நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான சரிவைச் சந்தித்தன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close