[X] Close

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உதவித் திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பொருளாதார நிபுணர்கள் கருத்து


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 08:25 am
  • அ+ அ-

‘அரசியல் கட்சிகள் அறிவிக்கும் எழைகளுக்கான குறைந்தபட்ச வருமான உதவித் திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்’ என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் பாஜக அரசு ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குவதாக அறிவித்தது. அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தி ஏழைகளுக்கு மாதம் ரூ.6,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்தியாவில் ரூ.2.5 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளவர்கள் 0.1 சதவீத சொத்து வரி விதித்தால் கூட இந்திய ஜிடிபியில் 1.1 சதவீத அளவுக்கு வரி வருமானம் கிடைக்கும். இதை வைத்து இத்தகைய குறைந்தபட்ச வருமான உதவித் திட்டத்தைச் செயல்படுத்தலாம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள பொருளாதார நிபுணர்கள், இதைச் செயல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது வறுமையை ஒழிக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்றனர். பிரெஞ்ச் பொருளாதார அறிஞர் கய் சோர்மன், வறுமையை ஒழிக்க இதுபோன்ற திட்டங்கள் பரவலாக பொருளாதார நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றார். ஆனால், இதற்கான நிதி ஒதுக்கீடு என்பதில் மிகுந்த கவனம் தேவை என்பதையும் எச்சரித்தார்.

பொருளாதார நிலைகளில் அதிக ஏற்றத்தாழ்வு நிலவும் சூழலில் இதுபோன்ற குறைந்தபட்ச வருமான உதவித் திட்டங்கள் ஏழைகளுக்குப் பெரிதும் பலனளிக்கும். இந்தியாவில் மொத்தம் 20 சதவீதம் குடும்பங்கள், அதாவது 5 கோடி குடும்பங்கள், மாதம் ரூ.12 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நிலையில் உள்ளன. இந்தக் குடும்பங்கள் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள் எனில், இதற்கு ஆகும் செலவு நம்முடைய ஜிடிபியில் 1.3 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனாகாரியா கூறுகையில், “இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ. 3.6 லட்சம் கோடி தேவை. இவ்வளவு பெரிய தொகையை எந்த நிதியிலிருந்து, எப்படி எடுத்து கொடுக்க முடியும்? ஆட்சியிலிருப்பவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து எடுத்து எல்லாத் திட்டங்களுக்கும் கொடுத்துவிடலாம் எனக் கருதுகிறார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக, அரசுக் கருவூலம் ‘காமதேனு’ அல்ல.” என்று கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close