[X] Close

ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து நரேஷ் கோயல் பதவி விலகினார்: பங்குகளின் அளவை குறைக்க ஒப்புதல்


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 06:57 am
  • அ+ அ-

தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து அதன் தலைவர் நரேஷ் கோயல் விலகினார். அவரது மனைவி அனிதா கோயல் மற்றும் எதியாட் ஏர்வேஸ் நிறுவன நாமினி உறுப்பினரும் தனது பொறுப்புகளிலிருந்து விலகினர்.

நேற்று நடந்த இயக்குநர் குழுகூட்டத்தில் நிறுவனத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய அதன்தலைவர் நரேஷ்கோயலே இயக்குநர் குழுவிலிருந்து வெளியேறும் முடிவை அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வங்கிகளின் கடன் அளவான ரூ.11.40 கோடி தொகைக்கு ஒவ்வொன்றும் ஒரு ரூபாய் மதிப்பிலான பங்குகளாக அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள், பங்குகளை விற்பது உள்ளிட்டவை ஜூன் காலாண்டில் மேற்கொள்ளப்படும். இதனிடையே வங்கிகள் ரூ.1,500 கோடியை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அளிக்கும் என்று தெரிகிறது.

பங்குகளை குறைக்க சம்மதம்

தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் நரேஷ் கோயல் வசம் உள்ளன. இதை 25.5 சதவீத அளவுக்குக் குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளார். எதியாட் ஏர்வேஸ்தனது பங்குகளை 12 சதவீதமாகக் குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளது. இதன்படி வங்கிகள் வசம் 50.5 சதவீத பங்குகள் செல்லும். நிறுவன நிர்வாகக் கட்டுப்பாடு வங்கிகள் வசம் செல்வதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் குத்தகை பாக்கிக்காக ஒவ்வொரு விமானமாக தரையிறக்கப்பட்டன. மேலும் போயிங் 737 மாக்ஸ் 8 ரகவிமானங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தரை இறக்கப்பட்டன. இந்த வகையிலும் ஜெட் ஏர்வேஸுக்கு நெருக்குதல் அதிகரித்தது. ஏறக்குறைய நிறுவனம் திவாலாகும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

ஜெட் ஏர்வேஸை தொடர்ந்துசெயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வங்கிகளை கேட்டுக் கொண்டது.

இதனடிப்படையில் கடன் அளித்த வங்கிகளின் கூட்டமைப்பு (எஸ்பிஐ) கடந்த வாரத்தில் வங்கிஇயக்குநர் குழுவிலிருந்து நரேஷ் கோயல் அவரது மனைவி மற்றும்எதியாட் ஏர்வேஸ் நாமினி ஆகியோர் பதவி விலக வேண்டும் எனதிட்டவட்டமாகக் கூறியது. இதன்பிறகே கூடுதலாக பணத்தை விடுவிக்க இயலும் என கூறப்பட்டது. இதையடுத்தே திங்கள்கிழமை நடைபெற்ற இயக்குநர் கூட்டத்தில் தனது பதவி விலகல் முடிவை அறிவித்தார் நரேஷ் கோயல்.

வங்கிகள், சப்ளைதாரர்கள், விமான குத்தகை பாக்கி என கடுமையான நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ் சிக்கித் தவிக்கிறது. இது தவிர ஊழியர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பைலட்டுகள் எச்சரித்துள்ளனர்.

ஏறுமுகத்தில் ஜெட் பங்கு

தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள், திங்களன்று பிற்பகலில், நரேஷ் கோயல் இயக்குநர் குழுவிலிருந்து வெளியேறுவதாக செய்தி வெளியான பிறகு ஏற்றம் பெறத் தொடங்கின. வர்த்தக முடிவில் 12 சதவீத அளவுக்கு இந்நிறுவனப் பங்குகள் கூடுதல் விலைக்கு வர்த்தகமாயின.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close