[X] Close

நிதி சேவையில் வங்கிகள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியாது: ஆர்பிஐ கவர்னர் கருத்து


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 06:58 am
  • அ+ அ-

நாட்டில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இதனால் நிதி பரிவர்த்தனையில் வங்கிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் பின்டெக் மாநாட்டில் பேசிய அவர், பல ஆண்டுகளாகவே ரிசர்வ் வங்கி நிதி பரிவர்த்தனையில் மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது.

இதன் மூலம் ரொக்க பரிவர்த்தனை குறைவாக உள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும். கடந்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை 9 மடங்கு அதிகரித்துள்ளது. நிஃப்ட் சிஸ்டம் மூலம் 195 கோடி பரிவர்த்தனைகள் ரூ. 172 லட்சம் கோடிக்கு 2017-18-ல் நடைபெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 4.9 மடங்கு அதிகமாகும். அதேபோல2017-18-ம் நிதி ஆண்டில் டெபிட்கார்டு மூலம் 141 கோடி பரிவர்த்தனைகளும், கிரெடிட் கார்டு மூலம் 334 கோடி பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பிரீபெய்ட் பேமென்ட்டில் 346 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மதிப்பு ரூ. 1.4 லட்சம் கோடியாகும். கார்டு மூலமான பரிவர்த்தனை முந்தைய ஆண்டை விட 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த கணக்கீடுகளைக் கொண்டு பார்க்கும்போது நிதிச் சேவையில் வங்கிகள் இனிமேலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியாது. மேலும் கட்டுபடியாகும் சேவை, எளிதாக மேற்கொள்ள உதவுவது, வாடிக்கையாளர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வங்கிகள் தொடர்ந்து வழக்கமான நிதி சேவையில் கவனம் செலுத்துகின்றன. மாறாக மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து வங்கிகளுக்கு சவாலாக வளர்ந்து வருகின்றன. தொழில்நுட்ப ரீதியிலும், சிறப்பான சேவை அளிப்பதன் மூலமும் இவை வளர்ந்து வருகின்றன என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close