[X] Close

போக்குவரத்து, பேட்டரி வாகன கட்டமைப்பு வசதிக்காக கீழ் ஓலா நிறுவனத்தில் ஹூண்டாய், கியா மோட்டார்ஸ் ரூ. 2,070 கோடி முதலீடு


hyundai-and-kia-invest-in-battery-vehicle-manufacture

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 11:30 am
  • அ+ அ-

வாடகைக் கார் செயலி நிறுவனமான ஓலா-வில், ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனங்கள் கூட்டாக 30 கோடி டாலரை (ரூ.2,070 கோடி) முதலீடு செய்துள்ளன.

கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் கார்ப்பரேஷனின் அங்கமாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் கியா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஹூண்டாய் நிறுவனம் சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் கார் உற்பத்தி ஆலையை அமைத்து செயல்பட்டு வருகிறது. கார் உற்பத்தியில் இந்நிறுவனம் மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆலை அமைத்து வருகிறது. இந்நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் தனது உற்பத்தியைத் தொடங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இவ்விருநிறுவனங்களும் ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்து ஒப்பந்தம் செய்துள்ளன.

அதன்படி இம்மூன்றுநிறுவனங்களும் இணைந்து போக்குவரத்துக்கு தீர்வு காண்பது, இந்தியாவுக்கு ஏற்ற பேட்டரி வாகனங்களை செயல்படுத்துவது மற்றும் அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவை ஒப்பந்தத்தில் அடங்கும். போக்குவரத்துக்கு ஏற்ற வாகனங்களை தயாரிப்பது அவற்றை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை இவ்விரு நிறுவனங்களும் மேற்கொள்ளும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஓலா டிரைவர்களுக்கு நிதி சேவை, குத்தகை மற்றும் சுலப தவணைகள் செலுத்தி வாகனத்தை பெறுவது எளிதாகும். அத்துடன் வாகனங்களை பழுது நீக்குவது உள்ளிட்ட பணிகளும் எளிதாகும்.

பொது மக்களின் போக்குவரத்தில் சிறப்பாக சேவையாற்ற நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் அதை மேலும் சிறப்பாக செயல்படுத்த வழி வகுத் துள்ளதாக ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தலைமுறைகளைக் கடந்து போக்குவரத்துக்கு எளிய தீர்வுகளை அளிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வெறுமனே கார் உற்பத்தி நிறுவனம் என்ற நிலையில் இருந்து அடுத்த கட்டமாக போக்குவரத்துக்கு தீர்வுகளை அளிக்கும் நிறுவனமாக மாற ஹூண்டாய் திட்டமிட்டு அதன்படி ஓலாவில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிகிறது.

2022-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடிவு செய்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close