[X] Close

ஆர்சிலர்மிட்டல்-எஸ்ஸார் ஸ்டீல் இணைப்புக்கு என்சிஎல்ஏடி நிபந்தனை ஒப்புதல்


arcelor-mittal

  • kamadenu
  • Posted: 19 Mar, 2019 10:21 am
  • அ+ அ-

கடன் சுமையில் திவாலாகும் நிலையிலுள்ள எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் வாங்கும் நடவடிக்கைக்கு தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்டி) நிபந்தனை ஒப்புதல் வழங்கியுள்ளது.

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்துக்கு ரூ.49,395 கோடி அளவுக்கு நிலுவைத் தொகை உள்ளது. பெரும் கடன்சுமையினால், தொடர்ந்து நிறுவனத்தை நடத்த முடியாமல் திவாலாகும் நிலையில் உள்ளது. இந்நிறுவனத்தை சர்வதேச அளவில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் வாங்க முடிவெடுத்தது.

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் கடன் முழுவதையும் அடைப்பதாக உறுதியளித்தது. ஆனால், இந்த இணைப்புக்கு சில கடன்தாரர்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. எனவே, இந்த விவகாரம் தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் வந்தது. நீதிபதி எஸ் ஜே முக்கோபதயா தலைமையிலான அமர்வு, எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை மீட்பதற்கான ஆர்சிலர்மிட்டல் நிறுவனத்தின் திட்டங்களைக் கேட்டறிந்தது.

இதையடுத்து இந்த இணைப்புக்கு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளது. எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் நிதி சார்ந்த கடன்தாரர்கள், தொழில் செயல்பாடுகள் தொடர்பான கடன்தாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை எனக் கூறிய தீர்ப்பாய அமர்வு, இறுதிக்கட்ட பரிவர்த்தனைகளைப் பரிசீலித்த பிறகு இணைப்பு நடவடிக்கையைச் செயல்படுத்தலாம் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது. கடன்தாரர்களிடையே எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க தீர்ப்பாயத்தின் நிபுணர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் கூறியுள்ளது. கடன்தாரர்களுக்கு நிலுவைத் தொகையைத் தருவதற்கான விகித அளவுகளைக் குறிப்பிடவும் திவால் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. எஸ்ஸார் ஸ்டீல் இயக்குநர்கள், ஆர்சிலர்மிட்டல் நிறுவனத்தின் இந்த மீட்பு நடவடிக்கையில் 100 சதவீதம் நிலுவைத் தொகை நிதி மற்றும் தொழில் செயல்பாடுகள் சார்ந்த கடன்தாரர்களுக்கு வழங்கப்படும் என தீர்ப்பாயத்திடம் சவால் விடுத்துள்ளனர். ஆனால், இந்த எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன மீட்பு நடவடிக்கைக்கு எதிராக ஸ்டாண்டர்ட் சார்ட்டட் என்சிஎல்ஏடியிடம் முறையிட்டுள்ளது.

அதற்கு வரவேண்டிய நிலுவைத் தொகையில் 1.7 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட உள்ளதாகவும், பிற கடன்தாரர்கள் ஒன்றிணைந்து குழு அமைத்து 85 சதவீத நிலுவைத் தொகையைப் பெற உள்ளார்கள் எனவும் கூறியுள்ளது. எஸ்ஸார் ஸ்டீல் நிதி சார் கடன்தாரர்களுக்கு ரூ.49,395 கோடி நிலுவை வைத்துள்ளது. அதில் ரூ.41,987 கோடி தரப்பட உள்ளது.

மேலும் தொழில் செயல்பாடு தொடர்பான கடன்தாரர்களுக்கு நிலுவைத் தொகை ரூ.4,976 கோடி. இதில் ரூ.214 கோடி மட்டுமே தரப்பட உள்ளது. இந்த வகையில் ஸ்டேண்டர்ட் சார்ட்டட் நிறுவனத்துக்கு ரூ.3,187 கோடி நிலுவைத் தொகையில் ரூ.60 கோடி மட்டுமே வழங்கப்படும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close