[X] Close

போலி நிதி நிறுவனங்களை தடுக்க அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்


fake-financial-institutions

ராம்நாத் கோவிந்த் - Getty Images

  • kamadenu
  • Posted: 24 Feb, 2019 13:18 pm
  • அ+ அ-

சேமிப்பு திட்டம் மூலம் பொது மக்களிடம் பணம் திரட்டி ஏமாற்றும் நிறுவனங்களிடமிருந்து வாடிக்கையாளர்களைக் காக்கும் நோக்கில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

முறைப்படுத்தப்படாத சேமிப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிப்பதாக குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் வெளியான அவசர சட்டம் தெரிவிக்கிறது.

இதன்படி தனி நபரோ அல்லது குழுவோ எந்த ஒரு நபரிடமிருந்தும் சேமிப்போ அல்லது கடனோ பெறக்கூடாது. அதேசமயம் பங்குதாரர் நிறுவனங்கள் சேமிப்பு மற்றும் கடனை உறவினர்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முறையற்ற சேமிப்புத் திட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த அவசர சட்டம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு நேற்று முன்தினம் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.

உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த அவசர சட்டம் முறையற்ற சேமிப்புகளை திரட்டும் தனி நபர், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி வகை செய்கிறது.

இந்த சட்ட மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. ஆனால் மாநிலங்களவையின் ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை. இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அவசர சட்டமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

முறைப்படுத்தப்படாத நிறுவனங்கள் அதாவது அனுமதி பெறாத நிறுவனங்கள், தனி நபர்கள் நிதி திரட்டி மோசடி செய்வதைத் தடுப்பதற்காக இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக நிதி சேவைகள் துறை செயலர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

முறையற்ற வகையில் சேமிப்பு திரட்டுவோர் அல்லது வட்டி அளிப்போர் மீது வழக்கு தொடரப்படும். அத்துடன் இதில் அதிகபட்சம் ஓராண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கவும் சட்டம் வகை செய்கிறது. அதேபோல ரூ. 2 லட்சம் முதல் ரூ. 50 கோடி வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close