[X] Close

ஏர் இந்தியா கடனை நிர்வகிப்பது பெரிய சவால்: தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தகவல்


air-india

  • kamadenu
  • Posted: 24 Feb, 2019 13:12 pm
  • அ+ அ-

கடன் சுமையில் சிக்கியுள்ள அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் கடன் பொறுப்புகளைக் கையாள்வது மிகப் பெரிய சவாலான விஷயம் என்று அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஸ்வினி லோஹானி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாதில் உள்ள ஐஎஸ்பி மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் மேலும் கூறியது:ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டத்தை கணக்கிடுவது மற்றும் அதன் கடன் சுமையைக் கையாள்வது மிகவும் சவாலான விஷயமாகும். அடுத்தது இந்நிறுவனத்தை செயல்படுத்துவதாகும். பொதுத்துறை நிறுவனங்களில் பாரம்பரியம் மிக்க ஏர் இந்தியா – இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இரண்டும் 2007-ம் ஆண்டில் இணைக்கப்பட்டன. அதிலிருந்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து உருவாகி வருவதாக அவர் கூறினார்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் சுமை ரூ.55 ஆயிரம் கோடியாகும். கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் எதிர்கொண்ட நஷ்டம் ரூ. 5,337 கோடியாகும். பொதுவாக எந்த ஒரு நிறுவனத்திலும் ஏற்படும் பிரச்சினை அதன் உயர் தலைவர்களால் ஏற்பட்டவையாகும். அது பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவாக இருந்தாலும் சரி, நிறுவனத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது உயர் தலைவர்கள்தான். இதைத் தவிர, ஊழியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களை ஊக்குவிப்பதன் மூலம்தான் நிறுவனத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லோஹானி ரயில்வே துறையிலிருந்து இந்நிறுவனத்துக்கு பொறுப்பேற்றார். பின்னர் 2017-ம் ஆண்டு ரயில்வே வாரிய தலைவராக பொறுப்பேற்ற அவர் டிசம்பர் 2018-ல் ஓய்வு பெற்றார். பிரதமர் மோடி தலைமையிலான பணியாளர் நியமன குழு லொஹானியை மீண்டும் ஏர் இந்தியாவின் தலைவராக நியமித்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close