[X] Close

விவசாயத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போதுமானதாக இல்லை: சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வறிக்கை தகவல்


farmerss

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 10:26 am
  • அ+ அ-

விவசாயத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கடந்த 20 ஆண்டுகளில் போதுமான அளவுக்கு உயரவில்லை என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) சுட்டிக்காட்டியுள்ளது.

1993-94-ம் ஆண்டு முதல் 2011-12 வரையான காலத்தில் விவசாயத் தொழிலாளிகளின் ஊதியம் 48 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில் அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள், மேலாளர்கள் ஆகியோரின் ஊதிய விகிதம் 98 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஐஎல்ஓ வெளியிட்டுள்ள ஊதியம் தொடர்பான அறிக்கையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

1993-94-ம் ஆண்டில் ஒரு விவசாயத் தொழிலாளிக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ. 120. அது 2011-12-ம் ஆண்டில் ரூ. 177 ஆக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள், மேலாளர்கள் ஆகியோரின் ஊதியம் ரூ. 530-லிருந்து ரூ. 1,052 ஆக உயர்ந்துள்ளது. தொழில்முறை பணியாளர்களின் ஊதிய விகிதம் 90 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஐஎல்ஓ ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

விவசாயத் தொழிலாளர்களைப் போலவே மீன் சார்ந்த பணியில் ஈடுபட்டிருப்போர், மிஷின் ஆப்பரேட்டர் ஆகியோரது ஊதியம் 44 சதவீத அளவுக்கே உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் அளிப்பதாக கூறியுள்ளது. ஆனால் விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு எவ்வித சலுகையும் காட்டப்படாதது இத்தொழிலை விட்டு பலரும் விலகும் நிலையை உருவாக்கும். ஏறக்குறைய 14.43 கோடி விவசாயத் தொழிலாளிகள் உள்ளதாக ஐஎல்ஓ குறிப்பிடுகிறது. ஊதிய கமிஷன் மூலம் உயர்வு அனைத்தும் அரசு பணியாளர்களுக்கு கிடைக்கிறது. இதைக் காரணம் காட்டி தனியார் நிறுவனங்களும் ஊதிய உயர்வு அளிக்கின்றன.

மிக அதிக அளவு ஊதியம் வழங்கும் நிறுவனங்களின் விகிதம்7.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது 20 ஆண்டுகளுக்குப் பிறகு 10.7 என்ற அளவுக்கு 2004-ல் உயர்ந்து 2012-ல் 7.6 என்ற நிலைக்கு சரிந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. பிற தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் விவசாயத் தொழிலாளிகளின் நிலைமை ஓரளவு பரவாயில்லை என்றே அறிக்கை கூறுகிறது. விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளில் தொழிலாளிகளின் ஊதியம் சற்று உயர்ந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close