[X] Close

உடனடி பணத் தேவைகளுக்கான கடன்


loan-for-immediate-cash-needs

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 14:41 pm
  • அ+ அ-

வீட்டுக் கடன், தொழில் கடன் போன்றவற்றுக்கு விண்ணப்பித்து, அந்தக் கடன் கிடைப்பதற்குள் உடனடியாக நாம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்க இருக்கிறது, ஆனால் உடனடியாக தொழிலுக்கு மூலதனம் தேவைப்படுகிறது என்ற சூழ்நிலை ஏற்பட்டாலோ, கவலை வேண்டாம் இதற்காகவே இருக்கிறது Bridge Loan. இது உடனடி குறுகிய கால பணத் தேவைகளுக்கான கடன்.

இத்தகைய குறுகிய கால கடன் தனிநபர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் இந்தக் கடனை தொழில் நிறுவனங்களைக் காட்டிலும் தனிநபர்களே அதிகம் வாங்குவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த கடனை சில நிதி நிறுவனங்களே வழங்குகின்றன. உதாரணமாக பாரத ஸ்டேட் வங்கி, வீட்டுக் கடன்களில் இந்தக் கடனை வழங்குகின்றன.

வீட்டை புதுப்பிக்கவோ விரிவுபடுத்தவோ அல்லது இரண்டாவதாக கட்டும் வீட்டுக்கோ இந்தக் கடன் வழங்கப்படும். பேங்க் ஆப் பரோடா தொழில் நிறுவனங்களுக்கு இத்தகைய கடனை வழங்குகிறது. எதிர்காலத்தில் வரவிருக்கும் நிதி ஆதாரத்தின் அடிப்படையில் இந்தக் கடனை வழங்குகிறது. பிற நிறுவனங்கள் இது போன்ற கடன்களை, இதே பெயரில் வழங்குவதில்லை என்றாலும், வேறு பெயர்களில் வழங்குகின்றன. அவையும் உடனடி குறுகிய காலநிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன.

உதாரணமாக கன்ஸ்யூமர் டியூரபிள் கடன், பே டே (Pay Day) கடன், ஆகியவையும் Bridge Loan போலத்தான்.

எப்படி செயல்படுகிறது?

நீங்கள் இரண்டாவது வீடு வாங்க திட்டமிடுகிறீர்கள் எனில் அதற்கான கடன் கிடைக்க சில காலம் ஆகலாம். ஆனால், நீங்கள் உடனடியாக ஆரம்ப தொகையை பில்டருக்குச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிலையில் நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது செலுத்தியுள்ள ஆவணங்களை அடிப்படையாக வைத்து Bridge Loan வழங்கப்படும். பிரதான கடன் கிடைத்ததும் அதிலிருந்து இந்த Bridge Loan கடனை அடைத்துவிடலாம்.

தொழில் நிறுவனங்கள், பங்கு மூலமான நிதி திரட்டலுக்காகவோ, அல்லது வெளியிலிருந்து வரவுள்ள கடனுக்காகவோ, அந்நிய நேரடி முதலீடுக்காகவோ, தொழில் கடனுக்காகவோ காத்திருக்கின்றன என வைத்துக்கொள்வோம். ஆனால், உடனடியாக ஒரு தொகையை முதலீடு செய்ய வேண்டிய பட்சத்தில் Bridge Loan வாங்கலாம்.

எதிர்காலத்தில் நிறுவனத்துக்கு கிடைக்கப்போகும் நிதி குறித்த ஆதார ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் முக்கியமாக அந்த ஆவணங்கள் எதிர்கால நிதி வருகையை எந்தவித முன் நிபந்தனைகளும் இல்லாமல் உறுதிசெய்யும் வகையில் இருக்க வேண்டும்.

முதிர்வும் வட்டியும்

இந்தக் கடன் திட்டங்கள் குறுகிய கால பணத் தேவைகளுக்கானது என்பதால் இந்தக் கடனுக்கான முதிர்வு காலம் மூன்றிலிருந்து ஆறு மாதங்களாக இருக்கின்றன. உதாரணமாக, மொபைல் கம்ப்யூட்டர் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்கள் வாங்க 3-6 மாதங்கள் முதிர்வுக்காலமாக வைக்கப்படுகிறது.

அதிகபட்சம் முதிர்வுகாலம் 12 மாதங்கள் வரை இருக்கும். உதாரணமாக தொழில் நிறுவனங்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கி வழங்கும் கடனுக்கு முதிர்வுக்காலம் 12 மாதங்களாக உள்ளது.

முதிர்வுக்காலம் குறைவாக இருப்பதால் இயல்பாகவே வட்டிவிகிதம் அதிகமாக இருக்கும். நாம் கொடுக்கும் அடமானத்தைப் பொருத்து வட்டிவிகிதம் நிர்ணயிக்கப்படும். கிரெடிட் மந்திரி சிஇஓ ரஞ்சித் புஞ்சா இதுகுறித்து கூறுகையில், “Bridge Loan-களுக்கு வட்டிவிகிதம் அதிகம். ஆனால் இது ஒவ்வொருவருடைய அடமான மதிப்பு, தரம் பொறுத்து மாறுபடக்கூடியது.

உங்களுக்கு வரப்போகும் நிதி ஆதாரத்தை வழங்குபவர் எந்த முன் நிபந்தனைகளுமின்றி அதை உறுதி செய்திருக்க வேண்டும். அப்படி ஆவணம் இருந்தால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.  அதுவே, சில முன் நிபந்தனைகள் இருக்கும் பட்சத்தில், Bridge Loan வழங்குபவர் வட்டிவிகிதத்தை அதிகமாக நிர்ணயிப்பார்” என்றார்.  

Bridge Loan வட்டிவிகிதம் 20 சதவீதத்திலிருந்து ஆரம்பமாகிறது என நிபுணர்கள் சொல்கிறார்கள். லோன்டேப் நிறுவனத்தின் இணை நிறுவனர் விகாஸ் குமார் கூறுகையில், “Bridge Loan வட்டிவிகிதம் 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை இருக்கலாம், சில சூழல்களில் அதற்கு மேலும் நிர்ணயிக்கப்படலாம்” என்கிறார்.

இந்தக் கடனை மாத தவணையாகவோ, முழு தொகையாகவோ செலுத்தி கடனை முடிக்கும் வசதி உள்ளது. பொதுவாக இந்தக் கடனில் முதிர்வுகாலத்துக்கு முன்பே கடனை முடிப்பதால் எந்த கட்டணமும் இல்லை.

மாற்று வழிகள்

Bridge Loan-க்கு அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்படுவதால், சில நெருக்கடியான சூழல்களில் கடன் வலையில் சிக்கும் நிலை ஏற்படலாம். எதிர்பார்த்திருக்கும் நிதி கிடைக்காமல் போனால்? எனவேஇதற்கு மாற்று வழிகளும் உள்ளன. நம்முடைய வழக்கமான வங்கியில் ஓவர் டிராப்ட் வசதியைத் தயாராக வைத்துக்கொள்வது, குறுகிய கால பணத் தேவைகளைச் சமாளிக்க சிறந்த வழிகளில் ஒன்று. இதன் மூலம் வட்டிவிகித செலவைக் குறைக்கலாம்.

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருந்தால், அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி குறுகிய கால பணத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். மாதாந்திர கட்டண தேதிக்குள் செலவழித்த பணத்தைச் செலுத்திவிட்டால் எந்தச் சிக்கலும் இல்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close