[X] Close

நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும்: பொருளாதார விவகாரத் துறை செயலர் நம்பிக்கை


economy-crisis

  • kamadenu
  • Posted: 03 Feb, 2019 10:49 am
  • அ+ அ-

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) நாட்டின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.3 சதவீத அளவுக்கு இருக்கும் என்று பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். இது திருத்தப் பட்ட மதிப்பீட்டைவிட (3.4% குறைவாகும். 2020-ம் ஆண்டில் பற்றாக்குறை இலக்கு 3 சதவீதமாக குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்து அதன்படி செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு நிதி ஆண்டு களில் பற்றாக்குறை இலக்கை எட்டுவதில் சற்று ஏற்ற, இறக்க நிலை காணப்பட்டது. ஆனாலும் அவை வளர்ச்சிப் பாதையை எந்தவகையிலும் பாதிப்பதாக அமையவில்லை. அந்த வகையில் நடப்பாண்டில் பற்றாக்குறை 3.3 சதவீத அளவுக்கு இருக்கும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

2020-21-ம் நிதி ஆண்டில் பற்றாக்குறை இலக்கு 3 சதவீதமாக இருக்கும் என்றும் அப்போது எவ்வித திருத்தப்பட்ட மதிப்பீட்டுக்கும் அவசியம் இருக் காது என்றும் கூறினார்.

இடைக்கால பட்ஜெட்டில் 2019-20-ம் நிதி ஆண்டில் பற்றாக்குறை 3.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் வரவு மற்றும் செலவுகளுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதற் கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 3 சதவீதத்தை எட்டி முதன்மைபற்றாக்குறையை போக்க திட்டமிட்டுள்ளது. முதன்மை பற்றாக்குறை என்பது நிதிப் பற்றாக்குறை தொகைக்கு அளிக்கப்படும் வட்டி தொகையை கழித்தது போக மீதமுள்ள தொகையாகும்.

அந்த வகையில் 2018-19-ல்முதன்மை பற்றாக்குறை ரூ. 48,481 கோடி. இது ஜிடிபி-யில் 0.3 சதவீதமாகும். திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி முதன்மை பற்றாக்குறை ரூ. 46,828 கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இது ஜிடிபி-யில் 0.2 சதவீதமாகும்.

இதன்படி 2020-21 மற்றும் 2021-22-ம் நிதி ஆண்டில் முதன்மை பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருக்கும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

முதன்மை பற்றாக்குறையை குறைப்பது என்பது நல்ல அறிகுறியாகும். பெறப்பட்ட கடன் தொகை மூலம் ஏற்கெனவே உள்ள கடன்களை திரும்ப செலுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

2018-19-ம் நிதி ஆண்டில் ஒட்டுமொத்த வரி வருமானம் ரூ. 23,067 கோடி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்த சரிவு என கணிக்கப்பட்டுள்ளது.

வரி வருவாயானது ஜிடிபியில் 12.1 சதவீத அளவுக்கு வரும் நிதி ஆண்டில் (2019-20) இருக்கும்க என்றும், இது அடுத்து வரும் நிதி ஆண்டில் 12.2 சதவீதமாக உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளதை கார்க் சுட்டிக்காட்டினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close