[X] Close

கரியமில வாயு வெளியேற்றம்: 10 ஆண்டுகளாக இந்தியா கட்டுப்படுத்தி வருகிறது - டபிள்யூஇஎப் மாநாட்டில் ஆனந்த் மஹிந்திரா பேச்சு


carbon-dioxide-emissions

டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் உரையாற்றும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

  • kamadenu
  • Posted: 24 Jan, 2019 12:27 pm
  • அ+ அ-

புவி வெப்பமாதலைத் தடுக்க பாரிஸ் மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டார்.

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் பேசிய அவர், தனது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தில் உள்ள 100 நிறுவனங்களும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையை 10 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து வருவதாகக் கூறினார்.

புவியைக் காப்போம் என்பது தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், மற்ற மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவும் பாரீஸில் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்றபடி கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். இந்தியாவில் பருவ நிலை மாறுபாடு, குறிப்பாக புவி வெப்பமடைவது குறித்து அனைவருமே கவலைப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்தப் புவியில் நாமும் வாழ வேண்டும் என்ற நோக்கில் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒவ்வொருவரும் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

இந்தியாவில் அதிகரித்துவரும் புகை மாசு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘வளர்ந்து வரும் இளம் நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. இங்குள்ள இளைஞர்கள் தாங்கள் வாழ சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர். அவர்கள் புவி நலன் காக்கப்பட வேண்டும் என உணரும்போது நிலைமை மேம்படும்’ என்றார்.

‘இந்த பூமி ஒன்றும் ஹோட்டல் அல்ல, நினைத்த நேரத்தில் அறையைக் காலி செய்து வெளியேற முடியும் என்று எந்த இளைஞரும் நினைப்பதில்லை. அனைவருக்குமே புவியைக் காக்க வேண்டும் என்பதிலும், கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதிலும் அதிகபட்ச அக்கறை உள்ளது’ என்றார்.

இந்த கருத்தரங்குக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல் கோர் பேசுகையில், ‘அமெரிக்காவில் உருவாக்கப்படும் புதிய வேலை வாய்ப்புகள் அனைத்தும் சூரிய மின்னாற்றல் மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி சார்ந்ததாக உள்ளன என்றார். ‘உலகின் அனைத்து பகுதிகளிலும் வெப்பநிலை அதிகமாகவே உள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் கடுமையான வெப்பத்தையே உலக நாடுகளில் பெரும்பாலானவை உணர்ந்துள்ளன’ என்றார்.

‘புவியில் எரிசக்தியில் 85 சதவீதம் வழக்கமான எரிபொருள் மூலமாகக் கிடைக்கிறது. இதை நம்மால் மாற்ற முடியும் என்பதுதான் நமக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம். ஆனால் அதை நாம் செய்கிறோமா என்பதுதான் நம்மிடையே உள்ள ஒரே கேள்வி’ என்றார்.

‘நாம் நினைத்ததைவிட சூழல்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன’ என்று இயற்கை சார்ந்த படத் தயாரிப்பாளர் சர்டொனால்டு அட்டன்பரோ சுட்டிக்காட்டினார். ‘இதை எவ்விதம் சமாளிப்பது என்பதுதான் நமக்குள்ள மிகப் பெரும் சவால்’ என்றார்.

‘நமது ஆரோக்கியத்துக்கு இப்போது உள்ள புவி வெப்பமயமாதலால் ஏற்படும் ஆபத்துகளை விட மிகப் பெரிய ஆபத்து ஏதும் கிடையாது’ என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டார். ‘அரசியல்வாதிகள் குறுகிய கால ஆட்சிக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விட தனி நபர்களாக எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கை அவசியம்’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close