கடந்த 5 ஆண்டுகளில் வங்கிக் கடன் பெற்று 27 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்: மக்களவையில் நிதித் துறை இணை அமைச்சர் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளில் கடன் பெற்று திருப்பித் தராமல் வெளிநாட்டுக்கு 27 பேர் தப்பி ஓடி விட்டதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா மக்களவையில் கூறினார். இவர்களில் 20 பேர் மீது சர்வதேச இன்டர்போல் மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார். மக்களவைக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் இதுவரையில் 8 பேர் மீது இன்டர்போல் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
தேடப்படும் தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் 2018-ன்கீழ் மொத்தம் உள்ள 27 பேரில் 7 பேர் மீது தொடரப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து ரூ. 50 கோடிக்கு மேல் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறும் நிறுவன இயக்குநர்கள், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் மிக்கவர்களின் பாஸ்போர்ட் நகலை வாங்கிய பிறகு கடன் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக சுக்லா தெரிவித்தார்.
வருமானம் 22% சரிவுதொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலமாக அரசுக்குக்கிடைக்கும் வருமானம் 22 சதவீதம் சரிந்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருமானம் குறைந்ததால் அரசின் வருவாயும் குறைந்ததாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா மாநிலங்களைவையில் தெரிவித்தார்.
தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலிக்கிறது. ஆனால் இந்நிறுவனங்களின் வருமானம் குறைந்ததால் அரசுக்கு வர வேண்டிய வருமானமும் குறைந்துவிட்டது.