[X] Close

ரிசர்வ் வங்கியின் உபரி நிதி வறுமை ஒழிப்புக்கு பயன்படுத்த அரசு பரிசீலனை: மக்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்


reseve-bank-government-review-the-use-of-surplus-financial-poverty-alleviation

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 11:07 am
  • அ+ அ-

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வசம் உள்ளஉபரி நிதியை அரசு எதிர்பார்க்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். அதேசமயம் வறுமை ஒழிப்பு மற்றும் பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆதாாரத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம் என்று அரசு பரிசீலித்ததாக அவர் கூறினார்.

மக்களவையில் நடைபெற்ற துணை மானியக் கோரிக்கை மீதானவிவாதத்துக்கு பதிலளித்து பேசியஅவர், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக பதில் கூறினார்.

ரூ.85,948.86 கோடி கூடுதல் செலவினம் குறித்த துணை மானியக் கோரிக்கைக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத் தொகையில் பாதித் தொகை வங்கிகளில் முதலீடு செய்யப்பட உள்ளது.

பொதுவாக பிற நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் மொத்த நிதி ஆதாரத்தில் 8 சதவீத அளவுக்குத்தான் கையிருப்பில் (ரிசர்வ்) வைத்துள்ளன. சில நாடுகளின் மத்திய வங்கிகள் கூடுதல் பாதுகாப்பு கருதி 14 சதவீத அளவுக்கு ரிசர்வ் வைத்துள்ளன. ஆனால் ரிசர்வ் வங்கி 28 சதவீத அளவுக்கு கையிருப்பில் வைத்துள்ளதாக ஜேட்லி கூறினார். இந்த நிதி ஆதாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்து நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசுக்கு நிதி கிடைக்குமானால் அது வறுமை ஒழிப்புதிட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றார். அத்துடன் பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப் போவதாக அவர் மேலும் கூறினார்.

மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையைக் குறைத்துள்ளதோடு பணவீக்கத்தையும் கட்டுக்குள் வைத்துள்ளது. உலகிலேயே விரைவாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிஅமல்படுத்தப்பட்டதால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் வறுமை ஒழிப்புதிட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவழி ஏற்பட்டுள்ளதாக அவர்கூறினார். காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 6.86 கோடியாக அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். விவசாயிகளின் நலனுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close