[X] Close

உணவுப் பொருள் வீணாவதை தடுக்க ஜனாதிபதி வலியுறுத்தல்


ramnath-govind

  • முகமது சல்மான்
  • Posted: 21 Dec, 2018 10:30 am
  • அ+ அ-

உணவுப் பொருள்களை  தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. ஆனால் உணவுப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைப்பதில்லை. இதற்கு உணவு  உற்பத்தியில் சங்கிலித் தொடர் நிகழ்வுகள் சரிவர நிர்ணயிக்கப்பட வேண்டும். உணவுப் பொருள் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினார்.

அகில இந்திய உணவு பதப்படுத்துவோர் சங்கத்தின் (ஏஐஎப்பிஏ) 70-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது: விவசாயி உற்பத்தி செய்யும் உணவுப் பொருளுக்கு கிடைக்கும் விலை, நுகர்வோர் அதே பொருளுக்கு கொடுக்கும் விலை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி குறைக்கப்பட வேண்டும். உணவுப் பொருள்கள் வீணாவது தடுக்கப்பட வேண்டும். அதேசமயம் எளிதில் மக்கும் வகையிலான பேக்கேஜிங் முறை அது சார்ந்த உற்பத்தித் துறை ஊக்குவிக்கப்பட வேண்டும். மனித சமூகத்தின் உடல் நலனுக்கு ஏற்ற உணவு வகைகளைஅளிப்பதில் பதப்படுத்தும் துறை உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலக அளவில் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவவில்லை. இந்தியாவில் உள்ள பதப்படுத்தும் தொழிற்சாலைகளை கருத்தில் கொண்டால் இந்தியாவின் உற்பத்தி தேவைக்கும் அதிகமாகத்தான் உள்ளது. சர்வதேச அளவில் இந்தியா போட்டியிட முடியும். இதன் மூலம் பொருளாதார பலனையும் எட்ட முடியும். இந்த பலன் அனைத்தும் விவசாயிகளையும் சென்றடைய செய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

உணவு பதப்படுத்தலில் நான்குமுனை அணுகுமுறை அவசியம். அதாவது விவசாய உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும். உணவு பதப்படுத்தல் தொழிலும் விரிவடைய வேண்டும். இதற்கு முதலில் நாம் உணவுப் பொருள் உற்பத்தியாகும் விவசாய நிலத்திலிருந்து அது உணவாக சென்றடையும் இடம் வரை சங்கிலித் தொடராக இணைக்கப்பட வேண்டும். உணவு உற்பத்தி செய்யும் விவசாயிக்கு கிடைக்கும் விளை பொருளுக்கான விலை, அதே பொருளை வாங்கும் நுகர்வோர் கொடுக்கும் விலை ஆகியவற்றுக்கு இடையே உள்நாட்டிலும், சர்வதேச அளவிலுமான விலை வித்தியாசம் குறைக்கப்பட வேண்டும்.

உலக அளவில் மிகப் பெரும் பிரச்சினையாக இருப்பது உணவுப் பொருள் வீணாவதுதான். இது தவிர்க்கபட வேண்டும். அதற்கு உணவு பதப்படுத்தும் துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

உணவு வீணாவது என்பது மிகப் பெரும் பொருளாதார பிரச்சினையாகும். இந்தியா போன்ற பரந்துபட்ட நாட்டில் உணவு நுகர்வில் மிகப் பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. உணவு வீணாவதை தடுப்பதன் மூலம் இந்தக் குறையைப் போக்க முடியும். அனைத்து தரப்பினருக்குமான உணவு விநியோகம் சீராக வழியேற்படும் என்றார்.

ஆண்டுதோறும் 1.2 லட்சம் டாலர்மதிப்பிலான உணவுப் பொருள் வீணாவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், இந்த அளவானது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பாதிஅளவாகும் என்றார். அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்பீடு ரூ. 1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய இழப்பீட்டை குறைப்பதில் உணவு பதப்படுத்தும் துறைமுக்கிய பங்காற்ற முடியும் என்றார்.

விவசாயிகளுடன் நீண்ட காலஅடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டு அதற்குரிய முதலீடுகள் மற்றும் கட்டமைப்புகளை உணவுபதப்படுத்தும் தொழில் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றார். இதன் மூலம் உணவுப் பொருள் வீணாவது குறையும். எளிதில் அழுகும் பொருள்கள் நீண்ட காலம் பாதுகாக்கப்படும் என்றார்.

மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தை உணவு பதப்படுத்தும் தொழில்துறையினர்  பயன்படுத்தத் தொடங்கும்போதுதான் அத்திட்டம் வெற்றிகரமானதாக மாறும் என்றார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க எளிதில் மக்கும் தன்மை கொண்ட மாற்று பாக்கேஜிங் முறையை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் சுற்றுச் சூழலையும் மண் வளத்தையும் பாதுகாக்க முடியும்.  உணவுப் பொருள்கள் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம்தான் வெளி நாடுகளுக்கும் எளிதில் ஏற்றுமதி செய்ய முடியும். புதிய உணவுப் பொருள்கள் சர்வதேச தரத்தில் வரும்போதுதான் அதற்கு வரவேற்பு இருக்கும் என்றார் ராம் நாத் கோவிந்த்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள உணவு பதப்படுத்தல் துறைசெயல்பாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் குறைவான நிலையில்தான் இத்துறை உள்ளது. இத்துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஐடிசி நிர்வாக இயக்குநர் சஞ்ஜீவ் பூரி குறிப்பிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close