[X] Close

வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு இ-வே பில் தேவையில்லை


tamilnadu-e-waybill

  • நெல்லை ஜனா
  • Posted: 29 Mar, 2018 10:13 am
  • அ+ அ-

நாடுமுழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் கட்டாயம் என அறிவித்துள்ள நிலையில், தமிழகத்திற்குள் ஜிஎஸ்டி வரி  விலக்கு அறிவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல இ-வே பில் தேவையில்லை என தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

சரக்கு வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ பொருட்களை எடுத்துச் செல்லும் போது சரக்கு வாகன ஓட்டிகள் இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகும்.

ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர் ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு அனுப்பும் போது, இ-வே பில்லை உருவாக்க வேண்டும்., ஜிஎஸ்டி வர்த்தகரின் பெயர், எந்த இடத்துக்கு பொருட்கள் செல்கிறது, இன்வாய்ஸ் எண், தேதி, பொருட்களின் மதிப்பு, எச்எஸ்என் கோட், வாகனத்தின் எண், அல்லது ரயில்வே, விமானம் குறித்த விவரம், காரணம், வாகன எண் ஆகியவற்றை அந்த இ-வே பில்லில் குறிப்பிட வேண்டும்.

இந்த இ-வே பில் இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள்ளோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கோ பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இந்த நடைமுறை தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் ஏற்கெனவே அமலில் உள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது, நாடுமுழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 1ம் தேதி முதல் நாட்டின் எந்த பகுதியிலும் இ-வே பில் இல்லாமல் எந்த பொருட்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தம். வரி இருந்தாலம், இல்லாவிட்டாலும், எந்த பொருளை எடுத்துச் சென்றாலும், அதற்குரிய இ-வே பில் இருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இ-வே பில் தொடர்பாக தமிழக அரசு நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இ-வே பில் வைத்திருப்பதற்கான நடைமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை தமிழகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும், இ-வே பில் இல்லாமல் கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது.

50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட பொருட்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். எனவே ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட எந்த ஒரு பொருளையும் இ-வே பில் இல்லாமல் எளிதாக கொண்டு செல்லலாம். இந்த அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வியாபாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

குறிப்பாக குறு மற்றும் நடுத்தர தொழில் செய்யும் அத்தியாவசிய பொருட்களை வர்த்தகம் செய்யும் வியாபாரிகளுக்கு இந்த உத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக வணிக வரித்துறை முதன்மை செயலாளர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close