[X] Close

மருந்து முட்டைக்கு நோ சொல்லுங்க… வருகிறது ஜப்பான் முட்டை


japan-ise-eggs

  • போத்திராஜ்
  • Posted: 27 Mar, 2018 16:05 pm
  • அ+ அ-

ஜப்பானில் இருந்து கார்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் போன்றவைகள் தான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது என கேட்டிருப்போம்.

அதிலும் சுஸூகி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

ஆனால், ஸூகி நிறுவனம் கார்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் முட்டை உற்பத்தியிலும் இறங்கி கலக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கூட்டுறவோடு இந்திய அரசு முட்டை இறக்குமதியில் ஈடுபட உள்ளது.

இந்தியாவில் இல்லாத கோழிப்பண்ணைகளுக்கா பஞ்சம், அப்படி இருக்கும் போது ஜப்பானில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கு என்று கேட்பது புரிகிறது.

முதலில் சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். ஜப்பானில் உள்ள ‘ஐஎஸ்இ புட்ஸ்’ என்ற நிறுவனமும், சுஸூகி நிறுவனமும் இணைந்து கோழி பண்ணையை சர்வதேச அளவில் நடத்தி, முட்டை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

ஐஎஸ்இ நிறுவனத்தின் மூலம் நாள்தோறும் 2 கோடி முட்டைகளை அங்குள்ள கோழிகள் நாள்தோறும் இடுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எத்தனை பண்ணைகள் இருக்க வேண்டுமென்று.

அமெரிக்கா, சீனா, ஆசியா நாடுகள் பலவற்றிலும் ஐஎஸ்இ நிறுவனம் கோழிப் பண்ணைகளை நிறுவி முட்டை உற்பத்தியி்ல ஈடுபட்டு வருகிறது. இப்போது, இந்தியாவிலும் கால்பதிக்கத் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் இதற்காக குஜராத் மாநிலத்தையும், தெலங்கானா மாநிலத்தையும் தேர்வு செய்து ஜப்பான் நிறுவனமான ஐஎஸ்இ கோழிப்பண்ணையை தொடங்க உள்ளது.

குஜராத்தின் சூரத் நகரிலும், தெலங்கானாவில் உள்ள சித்திபேட்டையிலும் அடுத்த சில மாதங்களில் ஜப்பானின் ஐஎஸ்இ நிறுவனத்தின் முட்டை பண்ணை செயல்படத் தொடங்கும்.

ஐஎஸ்இ முட்டை நிறுவனத்தின் அதிகாரி டகாஷி ஷிமாடா கூறுகையில், “ ஐஎஸ்இ நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என நினைக்கிறோம். இந்த முட்டைச் சந்தைக்குள் களமிறங்கும் முன் பலகட்ட ஆய்வுகள் நடத்தியபின்புதான் வந்துள்ளோம். இந்தியாவின் சராசரி முட்டை நுகர்வு என்பது வாரத்துக்கு ஒரு முட்டைதான். ஆனால், ஜப்பானைப் பொருத்தவரை நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையாகும்.

இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்திலும், குஜராத் மாநிலத்திலும் அதிகமாக முட்டை நுகர்வு இருக்கிறது. ஆந்திராவில் 98 சதவீத மக்கள் முட்டை சாப்பிடுகிறார்கள். குஜராத்தில் 62 சதவீதம் மக்கள் முட்டை சாப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் கோழிப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் போல் ஐஎஸ்இ முட்டைகள் இல்லை. உலகிலேயே மிகவும் தரமான, உயர்ந்த சுகாதாரத்தில், தயாரிக்கப்படும் முட்டை என ஐஎஸ்இ நிறுவனம் பெயரெடுத்துள்ளது.

எங்கள் பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு இயற்கை உணவுகளையும், மருந்துகளையும் தவிர செயற்கை மருந்துகளையும், மாத்திரைகளையும் கொடுத்து முட்டை உருவாக்க மாட்டோம்.

ஆனால், இந்தியாவில் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், உருவாக்கப்படும் முட்டைகளில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் அதிகமாக கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால், எங்களின் ஐஎஸ்இ கோழிப்பண்ணைகளில் கோழிகள் மிகுந்த சுகாதாரத்துடன், இயற்கை உணவுகள் சாப்பிட்டு, மருந்துகள் இல்லாத முட்டைகள் இடுகின்றன. முட்டைகள் இடப்பட்ட 24 மணிநேரத்துக்கள் தொழிற்சாலைக்குக்கு கொண்டுவரப்படுகின்றன.

முழுவதும் தானியங்கி முறைகளில் முட்டைகள் சோதிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, அதன் தரம் உறுதி செய்யப்பட்டு, முட்டைகள் பாதுகாப்பாக, உயர்ந்த தரத்துடன் பேக்கிங் செய்யப்படுகின்றன.

ஜப்பான் மக்களைப் பொருத்தவரை ஐஎஸ்இ முட்டைகளை மிகவும் நம்புகிறார்கள். இதன் காரணமாக முட்டைகளையும் அதிகமாக விரும்பி உண்கிறார்கள். ஜப்பானில் பல நூறுஆண்டுகளுக்கு முன்புவரை மருந்துகளுக்காக பயன்படுத்தப்பட்ட முட்டைகள் இன்று பிரதான உணவாக இருக்கிறது.

இந்தியாவில் கால்பதிக்கும் ஐஎஸ்இ நிறுவனம் கோழிமுட்டை உற்பத்தியில் மிகப்பெரிய புரட்சியையும், மக்கள் அனைவரும் தரமான முட்டைகளை உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஊட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாட்மிண்டன் முன்னாள் வீரர் கோபிசந்த் தான் பெங்களூரில் நடத்தும் கோபிசந்த் பயிற்சி அகாடெமிக்கு வரும் பயிற்சியாளர்களுக்கு முட்டை வழங்க வேண்டும் என விரும்பினார். இதற்காக, இந்தியாவின் முட்டைகளை விலைக்கு வாங்காமல், ஜப்பானின் ஐஎஸ்இ நிறுவனத்திடம் இருந்து 15 ஆயிரம் முட்டைகளை விலைக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி மையத்தில்தான் பி.வி.சிந்துவும் பயிற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்குது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close