வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இந்தியத் தலைவர் நியமனம்

வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக அபிஜித் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியப் பிரிவுக்கான தலைவராக இவரை நியமித்துள்ளது.
குறுஞ்செய்தி அனுப்பும் சேவை நிறுவனமான வாட்ஸ்அப் ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். சமீப காலங்களில் வாட்ஸ் அப்பில் பரவிய வதந்திகளால் கூட்டு வன் முறைகள் இந்தியா முழுவதும் பரவலாக நடந்தன. இதுபோன்ற சம்பவங்களில் நூற்றுக்கும் மேலானோர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை எடுக்கவும், விரைவில் இந்தியப் பிரிவுக்கான தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்ற வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியப் பிரிவின் தலைவராக அபிஜித்போஸ் என்பவரை நியமித்துள்ளது.
இவர் ஆன்லைன் பரிவர்த்தனை சேவை நிறுவனமான ‘ஈஸ்டேப்’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவன ராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ் அப் நிறுவனத்தில் இணையும் இவர் இந்தியப் பிரிவுக்கான பிரத்யேகக் குழுவை அமைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனத்தின் கலிபோர்னியா தலைமையிட குழுவுக்குப் பிறகு வெளிநாட்டில் அமைக்கப்படும் பிரத்யேகக் குழுவாக இந்திய வாட்ஸ் அப் நிறுவனத்தின் குழு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.