பண மதிப்பிழப்பு – கறுப்புப் பணம் ஒழிந்ததா?

2017- நவம்பர்-8-ஆம் தேதியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. ‘புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற பிரதமர் மோடியின் அதிரடியான அறிவிப்புக்குப் பின், இந்திய மக்கள் வங்கிகளிலும் ஏடிஎம் வாசலிலும் நீண்ட வரிசையில் நின்ற காட்சிகள் தொடர்ந்தன. இதற்குக் காரணம், கறுப்புப் பண ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக என்றே சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வளவு கறுப்புப் பணம் இந்த நடவடிக்கையால் ஒழிக்கப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இந்நூல்.
பண மதிப்பிழப்பு – கறுப்புப் பணம் ஒழிந்ததா? குன்றில் குமார்
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600014, விலை:ரூ.100
044-43993000
கதாநாயக பிம்பங்களின் மேல்தான் எப்போதும் மொத்த வெளிச்சமும் விழுகிறது. திரைப்படத்தில் கலையார்வத்தோடு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய பல்லாயிரம் கலைஞர்கள் பற்றிய முறையான ஆவணத் தொகுப்பு ஏதுமில்லை. அதுவும் நகைச்சுவை நடிப்பினால் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கலைஞர்களைத் தமிழ்ச் சமூகம் மறந்துவரும் நிலையில், நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் பற்றிய பல்வேறு தரவுகளைத் தேடியெடுத்துத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். 1936 தொடங்கி, 1950 வரைக்கும் 66 படங்களில் நடித்தவர் காளி என்.ரத்தினம். அவரின் அபூர்வமான படங் களையும் சேர்த்திருப்பது சிறப்புக்குரியது.
எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம் – வா.பாலகிருஷ்ணன்
மேன்மை வெளியீடு, சென்னை-600014,
விலை:ரூ.150
: 94449 03558
வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ரா’ அமைப்பு பற்றிய பல தகவல்களை எளிய நடையில் சுவாரசியமாகப் பதிவுசெய்துள்ளார் குகன். ‘ரா-வின் அம்மா’, ‘ரகசியமாக உள்ளே வா’, ‘அது ஒரு கவலைக் காலம்’, ‘கருப்புப் புலி கருப்பு ஆடு ஆன கதை’ என துணைத் தலைப்புகளே நம்மைப் படிக்கத் தூண்டுகின்றன.
இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது? குகன்,
வீ கேன் ஷாப்பிங்,
சென்னை-600011, விலை: ரூ.140,
99404 48599
கவிமதி.சோலாச்சியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. 11 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் வலம்வரும் கதாமாந்தர்கள் அனைவரும், அன்றாடம் எழுத்தாளர் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்களாகவே இருக்கிறார்கள். கதை எங்கே, எப்போது, எந்தச் சூழலில் நடைபெறுகிறது என்கிற வர்ணனைகள் அதிகமின்றி, உரையாடல்களிலேயே அநேக கதைகள் முடிந்து போகின்றன. விவசாயிகளின் அவலத்தைச் சொல்லும் ‘குருவிக்காடு’, பகட்டுச் சமூகத்தின் உள்முரணைக் கீறும் ‘அம்மணக்கட்டை’ கதைகள் முக்கியமானவை.
கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்
கவிமதி.சோலாச்சி,
இனிய நந்தவனம் பதிப்பகம்,
திருச்சி-620003, விலை:ரூ.110.
94432 84823