“திரைப்படத்தைக் காட்டிலும் ஆவணப்படம் இயக்குவது கடினம்!”-  ரவிசுப்பிரமணியன்


ravisubramniyam-documentry

முன்றில் இலக்கிய அமைப்பு நடத்திய மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழா, சென்னை மியூசிக் அகாடமியில் ஏப்ரல் 16 அன்று நடந்தது. இந்த ஆண்டு, கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான எஸ்.சண்முகம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இனி வருடந்தோறும் இலக்கியத் துறையில் சிறப்பாகப் பங்களித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படவிருக்கிறது.

விருதுபெற்றுள்ள ரவிசுப்பிரமணியனிடம் பேசியதிலிருந்து...

இந்த விருது உங்களுக்குள் என்ன மாதிரியான உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது?

என் கல்லூரிக் காலத்தில் மா.அரங்கநாதன் எழுதிய ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற கவிதையியல் சார்ந்த புத்தகத்தைப் படித்துத்தான் சில தெளிவுகளைப் பெற்றேன். அதன் பிறகு அவருடைய கதைகளைப் படித்தபின் அவரது ஆளுமை மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. இலக்கியப் பங்களிப்புக்காகப் பல விருதுகளை நான் பெற்றிருந்தாலும் நான் நேசித்த, பழகிய இலக்கிய மேதையின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம். மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

ஆவணப் படங்கள் எடுப்பதில் உள்ள சவால்கள் என்ன?

திரைப்படம் எடுப்பதைவிட ஆவணப் படம் எடுப்பது கடினம். விருது நிகழ்வில் பாரதி கிருஷ்ணகுமார் சொன்னதுபோல சினிமாவில் நாம் எழுதிய திரைக்கதைக்குக் கதாபாத்திரங்கள் நடிப்பார்கள். ஆனால், ஆவணப் படத்தில் பாத்திரங்கள்தான் என்ன பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். ஆவணப் படத்தில் பேசுபவர்கள் சொல்லும் தகவல்கள், விவரங்கள் அனைத்தும் மிகச் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் அபத்தமாகிவிடும்.

எல்லாத் தகவல்களையும் சரிபார்த்துத்தான் ஆவணப் படத்தை உருவாக்க வேண்டும். நாம் திட்டமிட்டது ஒரு மாதிரி இருக்கும், எடுப்பது வேறு மாதிரி இருக்கும், கடைசியில் எடிட் செய்து பார்க்கும்போது அது வேறு மாதிரியாக இருக்கும். ஒரு வகையில் அதன் சுவாரசியமும் அதுதான்.

தமிழ் எழுத்தாளர்களைப் பற்றித் தொடர்ந்து ஆவணப் படங்கள் எடுத்துவருபவர் நீங்கள். எப்படி இருக்கிறது இந்தப் பயணம்?

எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் வழியாக வேறொரு உலகை, வாழ்க்கையை, மனிதர்களை, சிந்தனைகளை இந்தச் சமூகத்துக்குக் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆவணப்படுத்துவது அவசியம் என்று உணர்ந்தேன்.

அந்த வகையில்தான் இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், மா.அரங்கநாதன், டி.என். ராமச்சந்திரன், திரிலோக சீத்தாராம் ஆகியோரின் ஆவணப் படங்களை தயாரித்து இயக்கினேன். இன்னும் வண்ணதாசன், கலாப்ரியா, ஓவியர்கள் எஸ்.ராஜம், ஆர்.பி. பாஸ்கரன் போன்ற சிலரது ஆவணப் படங்கள் நிதிப் பற்றாக்குறையால் நிறைவடையாமல் இருக்கின்றன. அவற்றையும் முடிக்க வேண்டும்.